முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கட்சி விதிகளில் திருத்தம்: இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். பதவிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் - நிர்வாகிகள் நியமனத்துக்கும் ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். வகிக்கும் கட்சி பதவிகளுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த தகவல் அ.தி.மு.க. வட்டாரத்தில் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நியமனம் ரத்து

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் இனி மேல் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. சசிகலாவின் நியமனமும் ரத்து செய்யப்பட்டது. 

நியமனம்

அதே சமயம் அதற்கு இணையான அதிகாரம் உள்ள வகையில் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 புதிய பதவிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். இதற்கான தீர்மானம் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக கட்சி விதிகளில் அவர்கள் திருத்தமும் மேற்கொண்டனர். பிறகு அவர்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நியமித்தனர்.

அங்கீகாரம் கிடைத்தது

இதையடுத்து, கட்சியில் மாற்றம் செய்யப்பட்ட புதிய விதிகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.-வில் செய்யப்பட்ட  புதிய விதிகளுக்கு ஒப்புதல் வழங்கி அனுமதி அளித்துள்ளது. புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

நிர்வாகிகள் மகிழ்ச்சி

தேர்தல் கமிஷனின் இந்த அங்கீகாரம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து