முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளுத்து வாங்கும் மழை: கர்நாடக அணைகள் வேகமாக நிரம்புகின்றன - காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமான பெய்து வருவதால், கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பெங்களூரு, குடகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக குடகு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைக்காவிரி பகுதியில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதே போல், ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது.

கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகண்டா பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமாரதாரா, நேத்ராவதி அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக, கர்நாடக காவிரி ஆற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. கர்நாடகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வரின் வாக்கு பலித்தது

இந்த நிலையில் கர்நாடகத்தில் அணைகள் நிரம்பி வருவதால் தமிழகத்திற்கு அம்மாநிலம் தண்ணீரை திறந்து விடலாம் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி சமீபத்தில் அறிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார். அவருடைய வாய் முகூர்த்தமோ என்னவோ கர்நாடகத்தில் மழை பெய்து வருகிறது. அணைகளும் நிரம்பி வருவதால் விரைவில் தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக அரசு இன்னமும் தனது பிரதிநிதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பி்டத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து