வர்த்தக மோதல் ஆரம்பம்: கனடா பிரதமர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
வாஷிங்டன், கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூட்டோ வர்த்தக வரி விதிக்கும் விவகாரத்தில் எங்கள் முதுகில் குத்திவிட்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார ஆலோசகர் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளடக்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வர்த்தக வரி விதிப்பு விகாரத்தில் நேர்மையற்று நடந்து கொள்கிறார் என்று கூறி மாநாட்டில் வழங்கப்பட்ட கூட்டறிக்கைக்கான ஆதரவை டிரம்ப் திரும்ப பெற்றார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகர் கூறுகையில், வர்த்தக வரிவிதிப்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் எங்களது முதுகில் குத்தி விட்டார். உள் நாட்டு லாபத்திற்காக முதிர்ச்சியற்ற அரசியலை செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூட்டோ, இது வருந்தமளிப்பதாக உள்ளது. கனடா மக்கள் அமைதியானவர்கள்தான். ஆனால் எங்களை எப்படி வேண்டுமானாலும் நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். கனடா - அமெரிக்கா இடையே வர்த்தகத்தில் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.