முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக் கடன் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டசபையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியில்தான் இருக்கிறது. எனவே தான், ஊரகப் பகுதி வாழ் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில், ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்காணும் திட்டங்களை அறிவிக்கின்றேன்.

சமுதாய உறிஞ்சு குழிகள்

ஊரகப் பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் 168 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதனால் கழிவு நீர் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

1,000 அங்கன்வாடி மையங்கள்

ஊரகப் பகுதிகளில் நடப்பாண்டில், 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள், 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். பழமையான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்களுக்குப் பதிலாக, நடப்பாண்டில் தலா 17 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள், 88 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-I தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் II-ஐ செயல்படுத்த 2017-18-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில், 192 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 287 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், 10 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.

ரூ.1,200 கோடியில் சாலைகள்

பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் 5,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.  ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. உப்பு அல்லது கடினத் தன்மை மற்றும் குடிநீரில் காணப்படும் இதர குறைகளை சீர் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரினை மக்களுக்கு வழங்க நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குக்கிராமங்களில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

60,000 குப்பைத் தொட்டிகள்

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், தெருவில் வைக்கும் 60,000 குப்பைத் தொட்டிகள் தலா 25,000 ரூபாய் மதிப்பில், 150 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், இவ்வீடுகளை பராமரிப்பு செய்து தரக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து வருவதை ஒட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகளை ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்படும். இதற்கான தொகை மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.11 ஆயிரம் கோடி கடன்

கடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 41,180 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் விதி எண் 110-ன் கீழ் 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8,332 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டது. அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து