முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடக்கிறது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அப்போது மாநில கோரிக்கைகள் குறித்து அவர் வலியுறுத்துவார் என தெரிகிறது.

முதல் கூட்டம்

நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாக குழுவின் 4-வது கூட்டம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.  முன்னதாக, நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 2015 பிப்ரவரியில் நடைபெற்றது. அப்போது, நிதி ஆயோக் அமைப்பிற்கான வரையறைகள், தேசிய விவகாரங்களில் மத்திய - மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நிதி ஆயோக் அமைப்பு பாலமாக செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.

4-வது கூட்டம்

இதையடுத்து, நிதி ஆயோக் அமைப்பின் துணைக் குழுக்களும், செயலாக்கக் குழுக்களும் உருவாக்கப்பட்டன. பின்னர், அதே ஆண்டு ஜூலை 15-ல் நடைபெற்ற நிர்வாகக் குழுவின் 2-வது கூட்டத்தில், துணை மற்றும் செயலாக்கக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற 3-வது கூட்டத்தில், மக்களவை - மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார். இந்த நிலையில்தான் நிதி ஆயோக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

முதல்வர் பங்கேற்பு

நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பு திட்டக் கமிஷன் என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. ஆனால் பின்னர் இந்த அமைப்பு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு பிரதமர் மோடி தலைமையில் உருவாக்கப்பட்டது. திட்டக் கமிஷன் செயல்பட்டு வந்த போது மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திட்டக் குழு கூட்டத்தில் அடிக்கடி பங்கேற்று தமிழகத்திற்கான நிதியை கூடுதலாக பெற்றுத் தந்தார். தற்போது நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இன்று பங்கேற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்குமாறு கோரிக்கை வைப்பார். மேலும் பல்வேறு கோரிக்கைகளையும் அவர் பிரதமரிடம் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லிக்கு புறப்பட்டார்

முன்னதாக நேற்று மாலை 6.20 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். இரவு 9.35 மணிக்கு  டெல்லி தமிழ்நாடு இல்லத்தைச் சென்றடைந்த அவர் அங்கு இரவில் தங்கினார். இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. ஜனாதிபதி மாளிகை கலாசார மையத்தில் காலை 10 மணிக்கு இக்கூட்டம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றுகிறார். மாலை 4 மணியளவில் கூட்டம் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு முதல்வர் பழனிசாமி செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், டெல்லியில் இருந்து இன்று மாலை 8.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். நள்ளிரவு 12.05 மணியளவில் சென்னைக்கு வந்து சேருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து