முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் தமிழகத்தின் உரிமையான 177.25 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்: அமைச்சர் டி.ஜெயக்குமார்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: காவிரியில் தமிழக உரிமையான 177.25 டி.எம்.சி நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரி வித்தார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:
கேள்வி: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில், பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறப்போவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளாரே?

பதில்: இது நீதிமன்ற விவகாரம். நான் கருத்து கூற முடியாது. அதே நேரம், அரசியல் ரீதியாக பார்த்தால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக, அங்கு பிரச்சினை உருவாகியுள்ளதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

கேள்வி: தீர்ப்பு தாமதம் ஆவதால் இந்த நிலையை எடுத்ததாக அவர் கூறுவதும் நியாயம் தானே?

பதில்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றொரு நீதிபதி ஆக 2 நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டதால் 3-வது நீதிபதிக்கு சென்றுள்ளது. நீதிமன்றத்துக்கு அவர் சென்றிருக்கும் நிலையில், நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண் டும்.

கேள்வி: 2020-ம் ஆண்டில் சென்னை யில் நிலத்தடி நீரே இருக்காது என்று நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?

பதில்:  நாட்டிலேயே முதல் முறையாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் நிலத்தடி நீர் சேமிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏரிகள், குளங்கள், கண்மாய்களைத் தூர்வார குடிமராமத்து திட்டத்துக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நிலத்தடி நீரை சேமிக்க வாய்ப்பு ஏற்படும். நிலத்தடி நீர் மேம்படும். தவிர, பருவமழையும் அந்தந்த பருவங்களில் சரியாக பொழிய வேண்டும். தற்போது பருவமழை உரிய காலத்தில் வருவதால் வருங்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் நிலை ஏற்படும்.

கேள்வி: மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக கண்காணிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்:  மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்டிடத்திலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் உள்ளது என்பதை எழுதி வைக்க வேண்டும்.
ஏற்கெனவே உள்ள கட்டிடங்களில், இந்த அமைப்பில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவற்றை சீரமைப்பதும் அவசியம்.

கேள்வி: கர்நாடகாவில் போதிய மழை பெய்துள்ளதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது பற்றி அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளாரே?

பதில்: கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருவதால் இரு மாநில விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி. இன்னும் 10 நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம், தண்ணீர் திறப்பது குறித்து ஒரு மாநில முதல்வர் முடிவெடுக்க முடியாது. நம் உரிமையான 177.25 டிஎம்சி நீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதிசெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து