முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் - டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : தமிழகத்திற்கு என்னென்ன தேவை என்பதை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 4-வது நிர்வாக குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.

2022 திட்டத்திற்கு ...

நான்காவது நிதிஆயோக் கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. தமிழகத்தின்  சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றோம். அம்மாவின் 2023 தொலைநோக்கு பார்வையுடன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி திட்டமாக விளங்குவதாக கருத்தில் கொண்டு, அதை இந்தியாவிற்கான 2022 திட்டத்திற்கு  வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதேபோல, விவசாயிகள் வளம்பெற நவீனமுறையில் வேளாண் விற்பனைக் கூடங்களை மேம்படுத்த கூடுதல் நிதி வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை பெருநகரங்களில் நேரடியாக விற்பனை செய்ய ஏதுவாக போக்குவரத்து வசதி உள்ளிட்ட உரிய கட்டமைப்புகளை உருவாக்கிட நிதி வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.

அனைவருக்கும் நல்வாழ்வு...

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளுக்கு  முக்கியத்துவம் தருவது குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டத்தைப் பற்றியும், விளக்கி மத்திய அரசிற்கு குறிப்பிட்டோம். அதற்கு தேவையான நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம். மக்கள் நல்வாழ்வுத் துறையில் “அனைவருக்கும் நல்வாழ்வு” என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் புதிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து அதிக மக்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் ஊட்டச்சத்து மற்றும் தடுப்புப்பூசி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவக் கல்லூரி ...

இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மத்திய அரசால்   வளர்ச்சி நோக்கி செல்லும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும், மருத்துவக் கல்லூரி துவக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல, விருதுநகர் மாவட்டத்திலே, பல்மருத்துவமனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பல்மருத்துவமனையினை அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

துரித நடவடிக்கை...

அனைத்து அதிகாரம் படைத்த காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைப்பதற்கான அறிக்கை வெளியிட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து, இவ்விரு அமைப்புகளும் உடனடியாக செயல்படுத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். 15-வது நிதி ஆணையத்தின்  ஆய்வு வரம்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை கணக்கில் கொண்டு நிதி பங்கீடு செய்வதாக உள்ளது. இது தமிழ்நாடு மக்களின் நலனிற்கு எதிராக அமையும் என்பதால், நிதி பங்கீட்டை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கணக்கில் கொண்டு வழங்கிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கின்றோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை எல்லாம் வைத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், விளக்கமாக தமிழ்நாட்டிற்கு என்ன என்ன தேவை என்பதை பிரதமரிடத்திலே வழங்கியிருக்கிறோம்.

கேள்வி: பிரதமர் தனியாக சந்தித்து பேச முடிந்ததா. குறிப்பாக காவேரி விவகாரமாக இருக்கட்டும், கிடைக்க வேண்டிய நிலுவை தொகையாக இருக்கட்டும், இதுமாதிரியான விஷயங்கள் குறித்து தனியாக பேச முடிந்ததா?

பதில்: தனியாக பேசினோம். பிரதமர் அவர்கள் கூட்டம்  முடிந்துவிட்டு வரும்போது, அவரிடத்திலே தமிழ்நாட்டினுடைய நிலைமையை எடுத்து கூறியிருக்கின்றோம். தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுயிருக்கின்றோம்.

கேள்வி: பிரதமர் ஏதாவது உத்தரவாதம் கொடுத்திருக்கிறாரா?

பதில்:  அப்படியெல்லாம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.

கேள்வி: ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பிரதமர் உங்களிடம் ஏதேனும் கேட்டாரா?

பதில்: ஏற்கனவே விசாரணையில் இருக்கிறது.

கேள்வி: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலம் தற்போது வரை உறுப்பினர்கள் பெயர் ஏதுவும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக மீண்டும் வலியுறுத்தினீர்களா?

பதில்: இது தொடர்பாக கூட்டத்திலே பேசியிருக்கின்றேன். விரைந்து குழு அமைத்து, அந்த குழு முதல் கூட்டத்தை கூட்டி, தமிழகத்திற்கு தேவையான நீர் திறந்துவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றோம்.

கேள்வி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நீங்கள் நேரில் போகவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டு நாட்களாகவே இருந்து வருகிறது.

பதில்: அதாவது எங்களுடைய துணை முதலமைச்சர் மற்ற அமைச்சர்கள் எல்லாம் நேரடியாக போய் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அத்தனை வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். மருத்துவமனையிலே சிகிச்சை பெறுகின்ற அனைவருமே தினந்தோறும் எங்களுடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் பார்த்து கொண்டு வருகிறார்கள். அந்த மாவட்ட அமைச்சர் பலமுறை நேரிலே சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறது. ஒருவருக்கு கால் அடிபட்டு, கால் எடுக்கப்பட்டு இருக்கிறது. அவரை சென்னையிலே மருத்துவமனையிலே சேர்த்து செயற்கை கால் பொருத்தப்பட்டு அவருக்கு பணி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார், அதுவும் வழங்குவதாக அவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளோம்.

கேள்வி: எந்த  ஒரு வாழ்வதார போராட்டம் நடந்தாலும் காவல்துறையை வைத்து தமிழக அரசு அடக்குகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

பதில்: இது தவறான கருத்து. இது அத்தனை ஊடகங்களுக்கும் தெரியும். பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். அரசு வந்து ஏற்கனவே 9.4.2018 அன்றே ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலே மேலும் ஐந்து ஆண்டு காலத்திற்கு எங்களுக்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பம் அளித்திருந்தார்கள். அந்த விண்ணப்பத்தை 9.4.2018 அன்று நிராகரிக்கப்பட்டு விட்டது. அதை 13.4.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பத்திரிகை வாயிலாக விளம்பரப்படுத்தினார்கள். ஆகவே, இந்த ஆலை இயங்காது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக அதை தடை செய்யப்பட்டு இருக்கிறது.  இந்த ஆலையை இயக்க முடியாது என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆலையை திறக்கமுடியாத அளவிற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பதை போராட்டக் குழு அனைவருக்கும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே, அரசை பொறுத்தவரைக்கும், அந்த ஆலை மூடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து