முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் இருந்து பிரான்சுக்கு ஓட்டம் பல பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி நாடு விட்டு நாடு செல்லும் நீரவ் மோடி

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் இருந்து பிரசல்ஸ் நகருக்கு தப்பிச் சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி அவர் இருப்பிடத்தை மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன.

நீரவ் மோடி, முதலில் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தஞ்சம் அளிக்க கோரி இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பித்தார். இதனால் லண்டனில் தங்கிருப்பது தெரிய வந்ததால் அவரை இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவர் தனது இடத்தை மாற்றி விட்டார். பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் இருப்பதாக உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

ஆறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தியதாகவும், இதில் இரு பாஸ்போர்ட்டுகள் செயல்பாட்டில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செயல்பாட்டில் உள்ள இரு பாஸ்போர்ட்டுகளில் ஒன்றில் முழுமையான பெயருடனும் மற்றொன்றில் முதல் பெயருடனும் இருக்கின்றன. ஆரம்பத்தில் முதல் பாஸ்போர்ட்டை மட்டும் அரசு முடக்கி இருந்தது. அடுத்தகட்டமாக இரண்டாம் பாஸ்போர்ட்டையும் முடக்கி இருக்கிறது.

இருப்பினும் மற்ற பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அவர் வெவ்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதாக தகவல் வந்துள்ளது. இதனால் எந்த நாட்டை தொடர்பு கொண்டு அவரை தேடுவது எனவும் அதிகாரிகள் குழம்பியுள்ளனர். நீரவ் மோடியின் அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் முடக்கி வைக்க தற்போது இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து