முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்! மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

மயிலாடுதுறை : தி.மு.க.வின் செயல்படாத தலைவர் (ஸ்டாலின்) செயல்படக் கூடிய இந்த அரசை குறை கூறுகிறார். காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் என்று மயிலாடுதுறையில் நடந்த காவிரி நதிநீர் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசினார்.

காவிரி பிரச்சினையில் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி கண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடச் செய்ததும் அவரே. இது தனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தனக்கு கிடைத்த வெற்றி என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவரது வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசு தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் அமைத்து வெற்றி கண்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் வெற்றி விளக்க கூட்டங்களை நடத்துமாறு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் வெற்றி விளக்க கூட்டங்கள் நடந்து வருகின்றன.

மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம்

இந்நிலையில் நேற்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் போராட்ட வெற்றி விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் மயிலாடுதுறை சென்ற போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு மற்றும் பாரதிமோகன் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது,

1970-ம் ஆண்டிலேயே காவிரி பிரச்சினை உருவெடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1971-ல் அப்போதைய தி.மு.க. அரசு சட்டமன்றத்திலும், சட்ட மேலவையிலும் தீர்மானம் நிறைவேற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் 1972-ம் ஆண்டிலேயே அந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றார். அப்போதே விவசாயிகளை ஏமாற்றியவர் கருணாநிதி. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தியிருந்தால் காவிரி பிரச்சினைக்கு அப்போதே தீர்வு ஏற்பட்டிருக்கும். ஏன் வழக்கை வாபஸ் பெற்றீர்கள். ஆக, மக்களை பற்றி கவலைப்படாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. அதன் பிறகு விவசாயிகள் சங்கம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 1986-ல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். நடுவர் மன்றம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதே அவரது முயற்சியால்தான். அவரது மறைவுக்கு பிறகு அம்மா (ஜெயலலிதா) பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார். அதன் பலனாக நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். இவர்கள் காவிரி பிரச்சினையில் என்ன நடவடிக்கையை எடுத்தார்கள். அழுத்தம் கொடுக்கவில்லை என்று எங்களை சொல்லும் நீங்கள் காவிரி பிரச்சினையில் என்ன அழுத்தம் கொடுத்தீர்கள்.

துரோகம் இழைத்தது தி.மு.க.

ஆக, காவிரி பிரச்சினையில் துரோகம் இழைத்தது தி.மு.க.வும், அதன் தலைவர் கருணாநிதியும்தான். ஆனால் அ.தி.மு.க. அரசு அப்படியல்ல. நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 22 நாட்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி பிரச்சினைக்காக உரிமைக்குரல் எழுப்பினார்கள். அதை மறக்க முடியுமா? நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் அளவிற்கு நமது எம்.பி.க்கள் அங்கே அழுத்தம் கொடுத்தார்கள். தி.மு.க. அமைச்சர்கள் அதை செய்தார்களா? அப்படி செய்திருந்தால் விடிவுகாலம் பிறந்திருக்குமே! சுய லாபத்திற்காக பதவியில் இருந்தவர்கள் தி.மு.க.வினர்.

செயல்படாத தலைவர்

தி.மு.க.வின் செயல்படாத தலைவர் (ஸ்டாலின்) செயல்படக் கூடிய இந்த அரசை குறைகூறுகிறார். இவரெல்லாம் செயல் தலைவரா? அன்றைய முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்காக அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை பலமுறை சந்தித்தார். ஆணையம் அமைக்க கோரி பல கடிதங்களை எழுதினார். நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்ததும் அம்மாதான். அதனால் அவருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. பொன்னியின் செல்வி என்று அவருக்கு பட்டம் கொடுத்தார்கள். ஆக, காவிரி பிரச்சினையில் கிடைத்த வெற்றியில் அ.தி.மு.க.வுக்கு பெரும் பங்கு உள்ளது. காவிரி பிரச்சினையை தீர்த்த அரசு அ.தி.மு.க. அரசு. உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையத்திற்கான உறுப்பினர்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகள் வெளியிட்டு விட்டன. ஆனால் கர்நாடகம் மட்டும் உறுப்பினர் பெயரை வெளியிட மறுக்கிறது. அதனால்தான் டெல்லி சென்ற நான் காவிரி ஆணையத்தை கூட்ட வேண்டும். எங்களுக்குரிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரிடமும், நிதின் கட்காரியிடமும் வலியுறுத்தினேன். 14 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. காவிரி பிரச்சினைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா? ஆனால் மறைந்த முதல்வர் அம்மா இப்பிரச்சினையில் நடவடிக்கை கோரி 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விவசாயிகளின் உரி்மைக்காக போராடும் அ.தி்.மு.க. அரசு. இந்த விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கூட நாங்கள் தொடர்ந்தோம். ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்கிறார் ஸ்டாலின். அணையில் நீர் இருந்தால்தானே திறக்க முடியும். தண்ணீரை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார் ஸ்டாலின். யார் ஆட்சியில் இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் அணையை திறக்க முடியாது. இவ்வாறு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சியில் ஜூன் 12-ம் தேதியை தாண்டி தண்ணீர் திறந்து விடப்பட்ட நாட்களின் பட்டியலை குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் உணவு உற்பத்தியில் முதலிடம் வகிப்பதை சுட்டிக் காட்டினார். சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை ரத்து செய்தது அ.தி.மு.க. ஆட்சிதான் என்று குறிப்பிட்ட முதல்வர், நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் விவசாயிகள் நிலை எனக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளையும் குறிப்பிட்ட அவர், அதற்காக இந்த ஆண்டு ரூ. 328 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார். மேட்டூர் அணையை திறக்க முடியாத காரணத்தால்தான் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். விவசாயிகளின் நலன் காக்கும் அரசு அ.தி.மு.க. அரசு. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. காப்பீட்டு திட்டம் மூலம் பல்வேறு நலன்களை அவர்களுக்கு வழங்கியது அ.தி.மு.க. அரசு என்று கூறிய அவர், நிலத்தடி நீரை உயர்த்த அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். கல்வித்துறை, மருத்துவத் துறையில் அரசு செய்த சாதனைகளை அவர் பட்டியலிட்டார். மின்சார உற்பத்தியில் அ.தி.மு.க அரசு செய்த சாதனைகளையும் முதல்வர் பட்டியலிட்டார். இந்த கூ ட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு முதல்வர் தனது பாராட்டுகளை தெரிவித்தார். முன்னதாக மயிலாடுதுறை செல்லும் வழியில் அவருக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட பலரும் முதல்வரை வரவேற்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து