முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியதே! திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

திருச்சி : அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருச்சியில் பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து திருச்சி சென்றார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

பங்கு நீர் கிடைக்க வேண்டும்

டெல்லியில்  நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில், உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தினுடைய கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி பேசப்பட்டிருக்கிறது.  தமிழ்நாட்டினுடைய, காவிரி நதிநீர் ஆணையத்திற்கும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவிற்கும் உறுப்பினர்களை நியமித்து விட்டார்கள், கேரளாவிற்கும் நியமித்து விட்டார்கள். பாண்டிச்சேரியிலும்  நியமித்து விட்டார்கள், ஆனால் கர்நாடகம் இன்னும் நியமிக்கவில்லை. இது மத்திய அரசுக்கு வலியுறுத்தி கூறப்பட்டிருக்கிறது, விரைந்து உறுப்பினர்களைப் பெற்று, காவிரி  ஆணையத்தினுடைய கூட்டம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைத்து, நமக்குக் கிடைக்கவேண்டிய பங்கு நீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர்  நிதின் கட்காரியை சந்தித்து குறிப்பிட்டிருக்கின்றேன். பிரதமர் மோடியிடமும் இது வலியுறுத்தி பேசப்பட்டிருக்கிறது. 

அணையை திறப்பது எப்போது?

மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி வந்தால்தான் நீரை திறந்து விடமுடியும். இப்பொழுது கர்நாடகாவில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது, விரைவாக மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கின்றோம்.  எங்களைப் பொறுத்தவரைக்கும், ஆணைய கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டுமென்று  ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது, மத்திய அமைச்சர் கட்காரிக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இப்பொழுது,  நிதிஆயோக் கூட்டத்திலே கலந்து கொண்டு பேசும் பொழுதும்,  இது வலியுறுத்தி பேசப்பட்டிருக்கிறது. மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சரை சந்திக்கின்ற பொழுதும் இது பற்றி விரிவாக பேசப்பட்டிருக்கிறது.
கேள்வி: இந்த மாத இறுதிக்குள் மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பி விடுமா?

பதில்: இறைவனிடம்தான் இருக்கிறது. நம்மைப் பொறுத்தவரைக்கும் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைத்து, விரைவாகக் கூட்டத்தைக் கூட்டி, நமக்குக் கிடைக்க வேண்டிய நீர் கிடைப்பதற்குண்டான வழிவகை செய்ய வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி கூறியிருக்கிறோம்.

கேள்வி: தங்கத்தமிழ்ச்செல்வன் உட்பட 8 எம்.எல்.ஏ-க்கள் உங்கள் அணியில் இணையப் போவதாக சொல்கிறார்களே, உண்மையா?

பதில்: தெரியவில்லை, நீங்கள்தான் சொல்கிறீர்கள், வந்து இணைந்தால் பாராட்டுக்குரியதுதான்.

கேள்வி: அவர்கள் வந்தால், அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக சொல்கிறார்களே?

பதில்: எப்படி அமைச்சர் பதவி கொடுக்க முடியும்? நீங்கள் எல்லோரும் விவரம் தெரிந்தவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள், சட்டம் தெரிந்தவர்கள், நீங்கள்தான் பத்திரிகையில் வெளியிடுகிறீர்கள், பெரும்பாலான மக்களும் இதைப் பார்த்து, படித்துத்தான் தெரிந்து கொள்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சட்டரீதியாக உங்களுக்குத் தெரியும்.

கேள்வி: இடைத்தேர்தல் வரவேண்டுமென்பதற்காக டி.டி.வி. அணி திட்டமிட்டு செய்வதாக சொல்கிறார்களே?

பதில்: நீங்கள் தான் சொல்கிறீர்கள், அப்படி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், சட்ட ரீதியாக அனைத்துமே தெரியும். இன்றைக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது எப்படி இடைத்தேர்தல் வரும்? இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் பேட்டி

பின்னர் அவர் மயிலாடுதுறை சென்றார். அங்கும் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் காவிரி குறித்தும், எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்தும் பேசினார்.

அதில், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இனிதான் தீர்ப்பு வரும். மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் 18 பேரும் மீண்டும் வந்தால் நல்லதுதான். அவர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ள நாங்கள் தயார். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது. அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நினைக்கிறேன். தங்க தமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

காவிரி ஆணைய உறுப்பினர்களை கர்நாடகா விரைவில் அறிவிக்க வேண்டும். காவேரி ஆணைய கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காவிரியில் நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இப்போதுதான் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. போதிய நீர் வந்தவுடன் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து