முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் துறையில் பின்பற்றப்பட்டுவரும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் நேற்று உறுதியளித்தார

திருவனந்தபுரத்தில் ஆயுதப்படை பிரிவு ஏ.டி.ஜி.பியாக இருப்பவர் சுதேஷ் குமார். இவரது அலுவலக கார் டிரைவரான கவாஸ்கர் காரை தாமதமாக எடுத்து வந்தார் என்பதற்காக ஏ.டி.ஜி.பி. மகள் ஸ்னிகிதா குமார் அவரை கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் கவாஸ்கர் காரை எடுக்க முடியாது என்று கூறவே, அவரின் கழுத்திலும், முகத்திலும் தனது செல்போனால் தாக்கியுள்ளார்.

இது குறித்து கவாஸ்கர் போலீஸில் புகார் செய்ய முயற்சிக்கவே உயரதிகாரிகள் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், அந்த மிரட்டலுக்குப் பணியாததால், ஏ.டி.ஜி.பி. மகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல, ஸ்னிகிதாவும் பதிலுக்கு கவாஸ்கர் மீது புகார் அளித்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் விஸ்வரூபம் எடுக்கவே, போலீஸ் ஏ.டி.ஜி.பி. பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும், கேரள போலீஸ் அமைப்பும் கீழ்நிலையில் பணியாற்றும் போலீஸாரை உயரதிகாரிகள் மனிதநேயத்தோடு நடத்தாததைக் கடுமையாகக் கண்டித்தன. இந்த விவகாரம் தீவிரமடையவே போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பேரா, மாநிலத்தில் எத்தனை போலீஸார் ஆர்டர்லி பணியில் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க உத்தரவிட்டார். மேலும், கவாஸ்கர், ஸ்னிகிதா புகாரை குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், நேற்று கவாஸ்கர், ஸ்னிகிதா விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

ஆங்கிலேயர் காலத்தில் காவல் துறையில் இந்த ஆர்டர்லி முறை கொண்டு வரப்பட்டது. ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பழக்கம் இங்கு இருந்து வருகிறது. கவாஸ்கர் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான விசாரணை குற்றவியல் ஏ.டி.ஜி.பி. மூலம் நடந்து வருகிறது. எந்தவிதமான மனித உரிமை மீறலையும், மீறல் நடப்பதையும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது.

தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் ஆர்டர்லி பணியில், உயரதிகாரிகளின் வீட்டுப் பணியிலும், அலுவலகப் பணியிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஆர்டர்லி முறை இனி கேரளாவுக்கு தேவையில்லை, இந்த ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் என்று நான் உறுதி கூறுகிறேன். அதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாகும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து