முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிசி உற்பத்தி குறித்த அரசின் புள்ளி விபரம் உண்மையானது அதிக உற்பத்தியை காட்டி மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அரசு காட்டமான பதில்

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: மாநில அரசு மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் தான் அரிசி உற்பத்தி குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் தமிழக அரசு அளிக்கும் புள்ளி விபரமே உண்மை. அதிக அளவிலான உற்பத்தியை காண்பித்து மக்களை திசைதிருப்ப வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி தொடர்பாக, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளதாக கடந்த 21-ம் தேதி வெளியான ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன்களாகவும், 2014-15-ம் ஆண்டில்அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன்கள் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

ஆனால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் தொடர்பான மே 2018 கையேட்டு குறிப்பில், தமிழ்நாட்டின் 2013-14-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்கள், 2014-15-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன்கள் என குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ள இந்த விபரம், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை தந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலானது எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பயிர்களின் சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் விவரம், மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வகுத்துள்ள தொழில்நுட்ப நெறிமுறைகளின்படி, அறிவியல் ரீதியாக உரிய புள்ளியியல் முறைகள் மூலம் கணக்கிடப்படுகிறது.

நெல் வயல்களில் அறுவடை பரிசோதனை பொதுவாக சாகுபடி பரப்பு மற்றும் ஒரு ஹெக்டேரில் கிடைக்கும் சராசரி மகசூல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மொத்த உற்பத்தி கணக்கிடப்படுகிறது. தமிழ்நாட்டில், பயிர்களின் சாகுபடி பரப்பு, வருவாய்த் துறை மூலம் மாதந்தோறும் கிராம அளவில் சேகரிக்கப்படுகிறது. இந்த விவரம் வருவாய்த் துறை, புள்ளியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலமாக குறுவட்டம், வட்டம் மற்றும் மாவட்ட அளவில் ஒத்திசைவு செய்யப்படுகிறது.

ஒத்திசைவு செய்யப்பட்ட மாவட்ட புள்ளி விவரங்கள் தீவிர ஆய்விற்குப் பின் தமிழ்நாடு அரசின் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறையினால் மாநில அளவில் ஒத்திசைவு செய்யப்பட்டு மொத்த சாகுபடி பரப்பு இறுதி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கான அரிசி உற்பத்தி கணக்கீட்டைப் பொறுத்தவரை, மத்திய அரசு வகுத்த பல்நிலை அடுக்கு மாதிரி ஆய்வு முறையில் சராசரியாக ஆண்டு ஒன்றிற்கு மாநிலம் முழுவதும் பரவலாக கணினி மூலம் பரிசோதனை தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் எதேச்சை எண்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு நெல் வயல்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் அதிகாரிகள் முன்னிலையில் 240 இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருவாய்த்துறை, புள்ளியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் முன்னிலையில் பயிர் அறுவடை செய்யப்பட்டு உண்மையான மகசூல் கணக்கிடப்படுகிறது. இந்த பரிசோதனைகளில் எட்டு சதவிகித பரிசோதனைகள் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அலுவலர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் ஆய்வு நிறுவன அலுவலர்கள் மூலம் 2013-14 மற்றும் 2014-2015 ஆகிய ஆண்டுகளிலும், தலா 240 இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு தான் ஒரு ஹெக்டேருக்கான மகசூல் திறன் கணக்கிடப்பட்டது. இவ்வாறு கிராம அளவில் சேகரிக்கப்பட்ட சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் விவரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பல்வேறு நிலைகளில் பலமுறை சரிபார்க்கப்பட்டு, ஆண்டுதோறும் மாநில அளவிலான அரிசி உற்பத்தி கணக்கிடப்பட்டு, இவ்விபரம் பருவம் மற்றும் பயிர் சாகுபடி அறிக்கை புத்தகமாக தமிழ்நாடு அரசின் பொருளியியல் மற்றும்புள்ளியியல் துறையினால் வெளியிடப்படுகிறது.

தமிழக அரசின் புள்ளி விபரங்களால் உயர் அளவு உற்பத்திக்கு விருது 2013-14-ம் ஆண்டிற்கானஅறிக்கை பக்கம் எண். 244ல், 2013-14-ம் ஆண்டு அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன் என்றும், 2014-15-ம் ஆண்டு அறிக்கை பக்கம் எண். 242-ல் அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விபரமே, மாநில அரசினால் வெளியிடப்படும் அனைத்து வெளியீடு மற்றும் அறிக்கைகளில் பதிவு செய்யப்படுகிறது. இதே புள்ளி விபர அறிக்கை தான் மத்திய அரசிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டிற்கான கணக்கீடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் முதன்மைச் செயலரால் 13.2.2015 நாளிட்ட கடிதம் வாயிலாகவும், 2014-15-ம் ஆண்டிற்கான கணக்கீடு 13.1.2016 அன்றும் தமிழ்நாடுஅரசின் சார்பாக அதிகாரபூர்வமாக மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலும், மத்திய அரசின் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்பும்தான், 2013-14-ம் ஆண்டில் பயறு வகை உற்பத்திக்கும், 2014-15-ம் ஆண்டில் சிறுதானிய உற்பத்திக்கும் மத்திய அரசின் உயர் அளவு உற்பத்திக்கான கிரிஷி கர்மான் விருது தமிழ்நாடு அரசிற்கு வழங்கி கௌரவித்தது.

2012-13 ஆண்டு வரை மாநில அரசினால் இறுதி செய்யப்பட்ட உற்பத்தி விவரங்கள் மாறுபாடு ஏதுமின்றி மத்திய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2013-14-ம் ஆண்டிலிருந்து புதிய கணக்கீட்டு வழிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, மத்திய அரசின் வேளாண் துறையானது, ஒவ்வொரு பயிருக்கும், மாநில அளவிலான உற்பத்தியை கணக்கிடும்பொழுது, மாநிலங்களிலிருந்து பெறப்படும் உற்பத்தி புள்ளி விபரங்களோடு, முந்தையஆண்டுகளின் பயிர் சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன், மழை மற்றும் பருவ நிலை, வேளாண் இடுபொருட்கள் விநியோகம் மற்றும் தானிய விலைநிலவரம் போன்ற பல்வேறு காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு,தேசிய அளவிலான உற்பத்தி அறிக்கையாக மத்திய அரசு வெளியிடுகிறது.

இவ்வெளியீடு மத்திய அரசு திட்டமிடல், கொள்கை முடிவுகள் வகுப்பதற்கான நிர்மாணிக்கப்பட்ட ஓர் புதிய அணுகுமுறையே ஆகும். மாநில அரசின் கணக்கீடே சரி. இப்புதிய அணுகுமுறை அமலுக்கு வந்த பின்னர், அதாவது 2013-14-ம் ஆண்டிலிருந்து தான் மாநில அரசின் கணக்கீட்டுக்கும், மத்திய அரசின் கணக்கீட்டிற்கும், மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. இந்த மாறுபாடு கூட, 2013-14-ம் ஆண்டிலும், 2014-15-ம் ஆண்டிலும், மாநில கணக்கீட்டை விட மத்திய கணக்கீடு குறைந்திருந்தாலும், 2015-16-ம் ஆண்டில் 6 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு மாநில அரசின் கணக்கீட்டை விட மத்திய அரசின் கணக்கீடு உயர்ந்த காணப்படுகிறது. இருப்பினும், மாநில அரசின் கணக்கீடு அறிவியல் ரீதியான மிகச் சரியான முறையில், 1950 முதல் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதால், மாநில அரசின் கணக்கீடு தான் சரியானதாகும் என்பதால், மாநில அரசின் அனைத்து வெளியீடுகளிலும் அதிகாரபூர்வமான புள்ளி விவரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உதாரணமாக, 2015-16-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி மாநில அரசின் புள்ளி விபரப்படி 73.746 லட்சம் டன் எனவும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் 75.17 லட்சம் டன் எனவும், மத்திய அரசின் அறிக்கையில் 79.80 லட்சம் டன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசின் புள்ளி விபரப்படி, 2011-12 முதல் 2015-16-ம் ஆண்டு முடிய உள்ள காலத்தில் அரிசி உற்பத்தியானது 71.15 லட்சம் டன்னிலிருந்து 79.49 லட்சம் டன் என்ற அளவிலேயே உள்ளது. 2012-13-ம் ஆண்டில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக, அரிசி உற்பத்தி 40.50 லட்சம் டன்னாக குறைந்தது. எனவே, அரிசி மகசூலைப் பொறுத்தவரை புள்ளியியல் துறை, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனஅலுவலர்கள்முன்னிலையில் நடத்தப்படுவதால், மாநில அரசு அளிக்கும் புள்ளி விபரமே உண்மைத்தன்மை கொண்டது.

மத்திய வேளாண் துறையின் புள்ளி விபர அறிக்கை சரியானதால் மத்திய வேளாண் துறையின் புள்ளி விபர அடிப்படையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல்வேறு காரணிகளை கணக்கில் கொண்டு புள்ளி விபரங்களை சீரமைத்து கணிக்கப்படுவதால், இவ்விரண்டு புள்ளி விபரங்களையும் ஒப்பிடுவது சரியான அணுகுமுறையல்ல. எனவே, மாநில அரசினால் அரிசி உற்பத்தி தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் விரிவான முறையில் அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் எய்தப்பட்ட உண்மை தகவல்களாகும். மேலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாத போதும், தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தித் திறன் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 2011-ம் ஆண்டில் தடையில்லா மும்முனை மின்சாரம் 12 மணி நேரத்திற்கு வழங்கியும், 2012-ம் ஆண்டிலிருந்து குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வழங்கி வந்ததன் அடிப்படையிலும், திருந்திய நெல் சாகுபடி முறையின் அமல்படுத்தியும், உயர் மகசூல் நெல் ரகங்களை பயன்படுத்தியும், நவீன கருவிகளை வழங்கியதன் மூலமும் உற்பத்தித் திறன் தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக அளவிற்கு எய்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகத் தான் 2011-ம் ஆண்டிற்குப் பின்னரும், நான்கு முறை மத்திய அரசின் அதிக உற்பத்திக்கான கிருஷி கர்மான் விருதும் இந்த அரசுக்குக் கிடைத்துள்ளது.

இவையெல்லாம் மாநில அரசு வேளாண் பெருமக்களின் பால் கொண்ட அக்கறையினாலும், வேளாண் பெருமக்களின் கடின உழைப்பினாலும், உணவு உற்பத்தியில் தமிழ்நாடு அரசின் நிலை மேம்பட இந்த அரசு எடுத்துக் கொண்ட சிறப்பு முயற்சியினாலும் தான் என்பதை அனைவரும் அறிவர். எனவே, செய்தித் தாள்களிலும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையிலும் குறிப்பிட்டது போல, அதிக அளவிலான உற்பத்தியை காண்பித்து மக்களை திசைதிருப்ப வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து