கொலை மிரட்டல்களால் எனது குரல் மேலும் வலுவடையும் - நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      சினிமா
PrakashRaj 2018 5 17

பெங்களூர் : தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வந்த அச்சுறுத்தல்களை கண்டு நான் சிரிப்பேன். நான் பயப்படவில்லை. இதனால் எனது குரல் மேலும் வலுவடைந்துள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து பிரகாஷ்ராஜ் மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து தனது எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், கவுரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளிகள் நடிகர் பிரகாஷ்ராஜையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில்,

இது போன்ற அச்சுறுத்தல்களை கண்டு நான் சிரிப்பேன். நான் பயப்படவில்லை. எனது குரல் மேலும் வலுவடைந்துள்ளது. இது போன்ற சூழல் தேசத்தின் மீது வெறுப்பை கொண்டு வருகிறது. இளைஞர்களை இது போன்று மூளை சலவை செய்பவர்கள் யார்? ஏன்? என்பதை எண்ணி தான் எனக்கு வருத்தம். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மூலம் அவர்கள் எந்த அளவுக்கு கர்வம் உடையவர்கள். எத்தனை பயமற்றவர்கள் என்பது புரிகிறது. குறிப்பாக இளைஞர்களுக்குள் பொய் பிரச்சாரங்கள் திணிக்கப்படுகிறது என்றார்.
பிரகாஷ்ராஜ், தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக சிறப்பு விசாரணை குழு விசாரணையில் தெரியவந்ததாக வெளியான செய்திகளின் புகைப்படத்தை பிடித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதில், கோழைகளே, எனது குரல் மேலும் வலுவடையும் என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து