அணு ஆயுத பேச்சுவார்த்தையில் குண்டரை போல் அடாவடியாக நடந்து கொள்ளும் அமெரிக்கா - வடகொரியா கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      உலகம்
northkorea comdemn 2018 7 9

பியாங்கியாங் : அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா குண்டரைப்போல அடாவடியாக நடந்து கொள்கிறது என்று வடகொரியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ தனது குழுவினருடன் வட கொரியா சென்று, அந்நாடு அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான செயல்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கில் நடைபெற்ற இந்த பேச்சுவார்தையில் அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து தெளிவான வரையறைகள் வகுக்கப்படவேண்டும் என்று இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. வடகொரியாவுடனான பேச்சுவார்தையை முடித்துக் கொண்ட மைக்கேல் பாம்பேயோ டோக்கியோவுக்கு சென்று அங்கு ஜப்பான் மற்றும் தென் கொரிய பிரதிநிதிகளிடம் பேச்சுவார்தை நடத்தினார்.

இது குறித்து பாம்பேயோ வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஜப்பான் - தென்கொரியா பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமைந்திருந்தது.  இந்த பேச்சுவார்த்தையின் போது வடகொரியா மீது அதிக அழுத்தங்களை தொடர்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா குண்டரைப் போன்று அடாவடி தனத்துடன் நடந்து கொள்வதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தையும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரிய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

அணு ஆயுத விவகாரத்தில் பாம்பேயோவின் செயல்பாடு ஒருதலைபட்சமாகவும், குண்டர்களின் அடாவடியைப் போன்றும் உள்ளது. இந்த விவகாரத்தை பொருத்தமட்டில், அமெரிக்காவிடமிருந்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. வடகொரியாவின் நல்லலெண்ணத்தையும், பொறுமையையும் அமெரிக்கா தவறாக புரிந்து கொண்டதுபோல் தெரிகிறது. எனவே, அணு ஆயுதம் தொடர்பான சமாதான உடன்படிக்கைகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புத்துயிர் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வடகொரியா சார்பில் வலியுறுத்தப்படுகிறது என அந்த செய்தித் தொடர்பாளர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.  வடகொரியாவின் இந்த நிலைப்பாடு குறித்து மைக்கேல் பாம்பேயோவிடம் கேட்டபோது அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து