20-ம் தேதி முதல் மாணவர்களுக்கு 'நீட் தேர்வு' பயிற்சி தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை : நீட் தேர்வுக்கான பயிற்சி முகாம்கள் வரும் 20-ம் தேதி முதல் மாநிலத்தின் 412 மையங்களில் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
விதிவிலக்கு...
ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. ஆனால் இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே இருப்பினும் ஆண்டுக்கு ஒரு முறையே நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதற்காக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். தமிழக அரசின் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதுவார்.
412 மையங்கள்...
நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வகையில் வரும் 20ம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 412 மையங்களில் இந்த பயிற்சி வழங்கப்படும். பள்ளிகளின் விடுமுறை நாட்களில் 3 மணிநேரமும் பள்ளியின் வேலைநேரம் முடிந்த பின்னர் ஒரு மணிநேரமும் பயிற்சி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும்...
புதிய பாடத்திட்டங்கள் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்த உள்ளது. சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெற்ற 1500 ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள் இந்த பயிற்சி அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும். ஆண்டுதோறும் இந்த பயிற்சி நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.