பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குண்டு வெடிப்பு: 14 பேர் பலி
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த பயங்கர குண்டு வெடிப்பால் 14 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் ஆளும் கட்சியின் ஆட்சிக் காலம் கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய பிரதமரை தேர்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக அந்த நாட்டில் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. அந்த நாட்டில், பிரச்சாரத்தின் போது, வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முக்கியமான வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்களுக்கு தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. வடமேற்கே பெஷாவர் நகரில் யாகாடூட் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அவாமி தேசிய கட்சி தலைவர் பிலார் தலைமையில் பிரச்சார கூட்டம் நடந்தது. இந்த குண்டு வெடிப்பால் 14 பேர் பலியாகி உள்ளனர். அதே போல் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவாமி தேசிய கட்சியின் தலைவர் பிலார் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.