முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் சிறப்பு சலுகையை இழக்க நேரிடும்: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

புதன்கிழமை, 11 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

டெஹ்ரான், எங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால், நாங்கள் அளித்து வரும் சிறப்புச் சலுகையை இந்தியா இழக்க நேரிடும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானுடன் போடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்தது. இதன்மூலம், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இனிமேல் ஈரானுடன் வர்த்தகத்தை தொடரக் கூடாது, மீறினால் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. நவம்பர் 4-ம் தேதிக்குள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கெடு விதித்தது.

ஈராக், சவுதி அரேபியாவை அடுத்து அதிக ஈரானிடம் இருந்து தான் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அதனால், அமெரிக்காவின் நடவடிக்கை இந்தியாவுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா ஈரானிடம் இருந்து இறக்குமதியை நிறுத்தினாலும் மாற்று வழியாக சவுதி அரேபியாவிடம் இருந்து செய்யும் இறக்குமதியை அதிகரிக்க இந்தியா நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில், தூதரக அதிகாரி மசூத் ரெஸ்வேனியன் ரஹாகி இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

சாபஹார் துறைமுகத்தின் விரிவாக்கத்துக்காக, தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்தியா முதலீட்டை செலுத்தவில்லை. மேலும், இந்த துறைமுகத்தின் மூலம் இணைக்கும் திட்டங்கள் ஏதும் நிறைவடையவில்லை. இது துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீத எண்ணெய் தட்டுப்பாட்டுக்காக இந்தியா ஈரானுக்கு மாற்றாக சவுதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளை அணுகும் பட்சத்தில், இந்தியா டாலருக்கு நிகரான தொகையில் இறக்குமதி செய்ய நேரிடும். அது இந்தியாவின் செலவை அதிகளவில் உயர்த்தும். மேலும், இதன்மூலம் ஈரான் வழங்கி வரும் சிறப்பு சலுகைகளையும் இந்தியா இழக்க நேரிடும் என்றார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையை மனதில் வைத்து இந்தியா ஈரானுடனான வர்த்தக உறவை துண்டிக்கவுள்ளது. அதேசமயம், ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் சாபஹார் துறைமுக திட்டத்தின் முக்கியத்துவத்தை அமெரிக்காவிடம் இந்தியா எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து