முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் திறன்பலகை மூலம் ஸ்மார்ட் வகுப்புகள் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் பார்வையிட்டார்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் திறன்பலகை மூலம் நடைபெற்று வரும் ஸ்மார்ட் வகுப்புகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் பார்வையிட்டார்.
ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் பாடத்திட்டங்களை படக்காட்சிகளாக கல்வி கற்பிக்கும் ஸ்மார்ட் வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டமானது, மத்திய அரசு இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.  அதன்படி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி, வேளாண்மை மற்றும் நீர்பாசன மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்களை மடிக்கணினி, புரொஜக்டர் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு எளிய முறையில் படக்காட்சிகளாக வகுப்புகள் நடத்தும் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின்  கற்றல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் போதிய அடிப்படை கல்வியறிவு ஆகியவற்றை உறுதி செய்தல் போன்ற பணிகளை கண்காணித்திட வட்டாரவள ஆசிரியர் பயிற்றுநர்களை நியமித்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 123 ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளனர். அவர்களில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளின் ஆசிரியர் பயிற்றுநர் திரு.எம்.உலகநாதன் என்பவர் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் ஆலோசனையின் பேரில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 18 அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் ஒரு பள்ளி வீதம் மடிக்கணினி, புரொஜக்டர் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன் பாடத்திட்டங்களை படக்காட்சிகளாக வெண்திரையில் திரையிட்டு ஸ்மார்ட் வகுப்புகளாக நடத்தி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். 
 குறிப்பாக மாணவ, மாணவியர்களுக்கான பாடத்திட்டங்கள் குறித்த செயலிகளை தரவிறக்கம் செய்து படக்காட்சிகளாக திரையிடப்பட்டு செயல்முறை கற்பித்தல் மேற்கொள்ளப்படுகிறது.  அதேபோல தமிழ்நாடு அரசின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூஆர் கோடு பாடங்களையும், எளிய முறையில் குழந்தைகளின் மனதில் பதிந்திடும் வகையில் 4டி தொழில்நுட்ப அனிமேஷன்கள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுகிறது.  இவ்வாறு நடத்தப்படும் ஸ்மார்ட் வகுப்புகள் மூலமாக எழுதி பழகுதல், வாசித்தல் போன்ற பயிற்சிகளில்  மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் திறன்பலகை கற்பித்தல் மூலம் நடத்தப்படும் ஸ்மார்ட் வகுப்பு பயிற்சிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.  இத்தகைய ஸ்மார்ட் வகுப்புகளில் மாணவ, மாணவியர்கள் காட்டும் ஆர்வம் குறித்து ஆசிரியர்களிடத்தில் கேட்டறிந்தார்.  மேலும் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்றலின் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இத்தகைய ஸ்மார்ட் வகுப்புகளை ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களிடத்தில் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து