முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கக் கூடாது: நிதி அதிகாரம் இல்லாத உயர்கல்வி ஆணையம் தமிழகத்திற்கு வேண்டாம் - மத்திய அரசின் முடிவை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் பல்கலைக் கழக மானியக் குழு கலைக்கப்படுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் கருத்து...

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வரைவு மசோதா குறித்து மாநிலங்கள் கருத்து தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தமிழத்தின் கருத்துக்களை தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த கடிதத்தை எழுதியுள்ளேன்.

தேவையில்லை...

தற்போது செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு நிர்வாக மற்றும் நிதி அதிகாரம் இருப்பதால் அதுவே போதுமானது என்பது தமிழக அரசின் கருத்து. ஒழுங்குப்படுத்தும் நிர்வாக அதிகாரம் மட்டும் கொண்ட உயர் கல்வி ஆணையம் என்பது தேவையில்லை. கடந்த 1956-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு, உயர் கல்வி நிறுவனங்களின் பயற்சி, கற்பித்தல், ஆராய்ச்சி போன்றவற்றை கண்காணித்து அவற்றுக்கு தேவையான நிதியுதவியை சரியான முறையில் வழங்கி வருகிறது. நிதிஒதுக்கீட்டில் வெளி்ப்படை தன்மையுடன், பரிந்துரைகளை ஆய்வு செய்து அதன்படி ஒதுக்கவும், நிராகரிக்கவும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

நிதி அதிகாரம் இல்லை...

ஆனால் அரசு தற்போது திட்டமிட்டு வரும் உயர் கல்வி ஆணையத்திற்கு நிதி அதிகாரம் ஏதுமில்லை. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது வேறு அமைப்புக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு ஆட்சேபனைகள் உள்ளன. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு சரியான முறையில் நடந்து வரும் நிலையில், இந்த அதிகாரத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துக் கொண்டால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

கடுமையாக எதிர்க்கிறோம்...

திட்டங்களுக்கு தற்போது 100 சதவீத தொகையும் பல்கலைக்கழக மானியக்குழுவால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் உயர் கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால் திட்டங்களுக்கான ஒதுக்கீடு தொகை 60 : 40 என்ற அளவில் மத்திய அரசும், தமிழக அரசும் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். எனவே உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது. பல்கலைக்கழக மானியக்குழு தொடர்ந்து செயல்படும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆலோசனை...

முன்னதாக, நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்கலைக் கழக மானிய குழுவை கலைத்து விட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார், உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்த ஆணையம் அமைக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் உரிமை பாதிக்கப்படும். மேலும் பல்கலைக் கழகங்களுக்கு கிடைத்து வரும் நிதி கேள்விக்குறியாகும். எனவே உயர்கல்வி ஆணையத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பது என இந்த கூ ட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து