முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 85-வதுஆண்டாக நேற்று காலை தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர். திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்போக...

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அங்கு அணைகள் நிரம்பி அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 அடியாகவும், நீர் இருப்பு 69 டி.எம்.சியாகவும் உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று காலை 10.25 மணியளவில்  முதல்போக டெல்டா பாசனத்திற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அணையை திறந்து வைத்தார்.

அமைச்சர்கள்...

இந்த விழாவிற்கு பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் தலைமை வகித்தார். பள்ளிகல்வித் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், சுற்றுசூழல்த்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சமூகநலத்துறை அமைச்சர் டா்க்டர் வி.சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள். மேட்டூர் செ.செம்மலை, சேலம் மேற்கு ஜி.வெங்கடாஜலம், சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல், சங்ககிரி ராஜா, ஓமலூர் வெற்றிவேல், வீரபாண்டி மனோன்மணி, ஆத்தூர் சின்னதம்பி, கெங்கவல்லி மருதமுத்து, ஏற்காடு சித்ரா, திருச்செங்கோடு பொன்சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லணையை...

முடிவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே நன்றி கூறினார். மேட்டூர் அணையில் இருந்து 85-வது ஆண்டாக, டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  முதல்கட்டமாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக 12 ஆயிரம் கன அடி வரை டெல்டா பாசனத்தின் தேவையைப் பொறுத்து அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் கல்லணையை அடுத்த மூன்று நாள்களில் சென்றடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுவையை இழந்த சோகத்தில் இருந்த டெல்டா விவசாயிகள், இப்போது அணை திறக்கப்பட்டதால் சம்பா சாகுபடிக்காக தங்களது நிலத்தை மகிழ்ச்சியுடன் தயார்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

மின்சாரம் உற்பத்தி...

காவிரி டெல்டா பாசனத்துக்காக,மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால்  அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 6 கதவணை மின் நிலையங்கள் மூலம் 480 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 85 ஆண்டு கால வரலாற்றில், மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறந்து விட்ட முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். இதுவரை எந்த முதல்வரும் நேரில் சென்று திறந்துவிட்டதில்லை எனபது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணை பாசனத்துக்காக வழக்கமாக திறக்கும் ஜூன் 12-ம் தேதிக்கு பிறகு, தற்போது 59-வது முறையாக திறக்கப் பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து