முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலை குறித்து நடிகர் விஜய் சேதுபதியின் கருத்து: பசுமைத் தாயகம் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் புகையிலை குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பசுமைத் தாயகம் ''பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; கொச்சைப் படுத்தாமல் இருக்க நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் கொண்ட போஸ்டர்கள் வெளியிடக்கூடாது என்று புகையிலை தடுப்புச்சட்டத்தில் உள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய்யின் 'சர்கார்' பட போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி வெளியாகி இருந்தது. இதுகுறித்து பசுமைத் தாயகம் அமைப்பு கண்டனம் தெரிவித்து புகாரும் அளித்தது.

இதையடுத்து அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அந்த போஸ்டர் நீக்கப்பட்டது. அரசின் சட்டத்தை தனிநபர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை போல் அண்மையில் இயக்குநர் டி.ராஜேந்தர் விமர்சித்திருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதியும் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, “புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பது தொடர்பாக நடிகர்களை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்குப் பதிலாக சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்” என்று கூறியிருந்தார். இதற்கு பசுமைத் தாயகம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பசுமைத் தாயகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பது தொடர்பாக நடிகர்களை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்குப் பதிலாக சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்” என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

நடிகர்கள் புகை பிடிப்பதை எதிர்ப்போர், புகையிலை கம்பெனிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு யார் சொன்னது?

ராமதாஸால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு புகையிலைப் பொருட்களை எல்லா வழிகளிலும் ஒழித்துக்கட்ட கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால்  முன்வைக்கப்பட்ட புகையிலை ஒழிப்பு திட்டங்களை முழுமையாக செயல்படுத்தியவர் அன்புமணி ராமதாஸ். இந்த உண்மைகளை நடிகர்களுக்கு யாராவது எடுத்துச்சொல்ல வேண்டும்.

"சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்" என்கிறார் விஜய் சேதுபதி. அதையும் பசுமைத் தாயகம் அமைப்பு செய்துகொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து