முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க தமிழக அதிகாரிகள் உறுதி

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

தேனி: பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்காமல், தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கேரள அதிகாரிகளின் கோரிக்கையை தமிழக அதிகாரிகள் நிராகரித்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீர் தேக்கப்படும் என உறுதியாகத் தெரிவித்தனர்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 134 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 4,670 கன அடியாக இருந்தது. இதனால் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் 5,539 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.

பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை நெருங்கி வருவதால், மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழுவினர் அணையில் ஆய்வு செய்தனர்.

மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி, மழை அளவு, அணைக்கு நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவு நீர் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். அணை முழு பாதுகாப்பாக இருப்பதை ஆய்வுக் குழு உறுதி செய்தது. மேலும் 4 மதகுகளை ஏற்றி, இறக்கி ஆய்வு செய்தனர். அப்போது தமிழக பிரதிநிதிகளான பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி கோட்டப் பொறியாளர் சாம் இர்வின், கேரளப் பிரதிநிதிகளான அந்த மாநில நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் சோனி தேவஸ்யா, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள அதிகாரிகள் பேசியதாவது:
கேரளாவில் பலத்த மழையால் உயிர், பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியாறு அணையில் அதிக நீரை தேக்கி வைத்து, 142 அடிக்கு மேல் வரும்போது மொத்தமாக திறக்க வேண்டாம். அந்த நிலை வந்துவிடுமோ என கேரள மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் தமிழகத்துக்கு தற்போதே அதிக அளவில் நீரை கொண்டு சென்று தேக்கிக்கொள்ள வேண்டும் என்றனர்.

142 அடிக்கு தண்ணீரை தேக்கவிடாமல் செய்வதற்காகவே கேரள அதிகாரிகள் இவ்வாறு கூறுவதாகக் கருதிய தமிழக அதிகாரிகள் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்தனர். பருவ மழை பெய்து வருவதால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீர் தேக்கப்படும். அதே நேரம், சூழ்நிலைக்கு ஏற்ப தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கப்படும் என்றனர்.

பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து இதே நிலையில் இருந்தால் இன்று நீர்மட்டம் 136 அடியை எட்டிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தாலும் நீர்மட்டம் 142 அடியை எட்டிவிடும். பின்னர், பலத்த மழை பெய்து வரும் கேரளாவுக்கு தண்ணீரை வீணாக திறக்க வேண்டியிருக்கும். இதனால் அதிகாரிகள் நேற்று முதலே வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீரை திறந்துள்ளனர். 4 ராட்சதக் குழாய்கள் வழியாக தலா 400 கனஅடி வீதம் 1,600 கனஅடி மட்டுமே திறப்பது வழக்கம். இந்த தண்ணீரில் இருந்துதான் லோயர் கேம்பில் மின்சாரம் தயாரிக்கப்படும்.

இத்துடன் இரைச்சல் பாலம் வழியாக 700 கனஅடி கூடுதலாக திறந்து, வைகை அணையில் சேமிக்கப்படுகிறது. கேரள பகுதிக்கு தண்ணீர் திறப்பதை தவிர்க்கும்போது மட்டுமே இரைச்சல் பாலத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து