முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் என்னை ராகுல் கட்டித்தழுவியது தேவையற்ற செயல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காரணத்தை கேட்டால் அணைப்பை மட்டுமே தந்ததாக பிரதமர் மோடி கிண்டல்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ: பாராளுமன்றத்தில் என்னை ராகுல் கட்டித் தழுவியது தேவையற்ற செயல் என்றும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான காரணங்களை நாங்கள் கேட்டோம். ஆனால், அவர்கள் அதற்குரிய பதிலை கொடுக்கத் தவறியதால் தேவையற்ற அணைப்பை மட்டுமே அவர்களால் தர முடிந்தது என்றும் மோடி பேசினார்.

மிகப் பெரிய கரும்பு உற்பத்தி கேந்திரமாகவும் நாட்டின் மிகப்பெரிய தானிய சந்தையாகவும் திகழும் ஷாஜகான்பூரில் நேற்று நடைபெற்ற கிஸான் கல்யாண் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
பல கட்சிகள் ஒன்றாக இணைந்து வருவதற்கு பா.ஜ.க.வை எதிர்ப்பது மட்டுமே ஒரு வாய்ப்பாக இருக்கும். மக்களவையில் என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்டால் அவர்களை ஏதாவது சொல்லி திருப்திப்படுத்தியாக வேண்டிய நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்வையெல்லாம் பிரதமர் இருக்கையின்மீதுதான்.

ஒரு கட்சியோடு இன்னொரு கட்சி சேர்கிறது. பின்னர் கட்சிமேல் கட்சி சேர்கிறது. ஒரு சதுப்பு நிலமாகக் காட்சி அளிக்கிறது. சதுப்பு நிலம் தாமரைக்குச் சாதகமாக இருக்கும். தாமரை பா.ஜ.க.வின் தேர்தல் சின்னம்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான காரணங்களை நாங்கள் கேட்டோம். ஆனால் அவர்கள் அதற்கு உரிய பதிலைக் கொடுக்கத் தவறி விட்டனர். தேவையற்ற அணைப்பை மட்டுமே அவர்களால் தர முடிந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவையற்றது. இதற்காக எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று முன்தினம் நடந்தவற்றில் யார் மீது தவறு என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் தயாரா? அவர்கள் ஏழைகளையோ நாட்டையோ பார்க்கவில்லை. அவர்கள் கண்கள் எல்லாம் பிரதமர் இருக்கையின்மீதுதான். நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? நான் ஏழைகளுக்கும், நாட்டிற்கும் மட்டுமே வேலை செய்கிறேன். அப்படியெனில் ஊழலுக்கு எதிராகப் போராடுவதுதான் நான் செய்த தவறு.

விவசாயிகளுக்கு உதவ விருப்பமின்றி இருந்தன முந்தைய அரசாங்கங்கள். எங்கள் அரசாங்கத்தில் விவசாயிகளுக்காகக் கொண்டு வந்த நிறைய நலத் திட்டங்களை வரிசையாகச் சொல்ல முடியும். ஆனால் முன்பு ஆட்சி புரிந்த கட்சிகள் விவசாயிகளுக்கு என்று எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு விருப்பமுமில்லை. முதல் தடவையாக தொழிற்சாலைகளில் கரும்புச் சாறிலிருந்தும் வெல்லப் பாகிலிருந்தும் எத்தனாலைப் பிரித்தெடுக்க டிசம்பர் 1-லிருந்து அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்ற பிறகு மோடி கலந்து கொள்ளும் முதல் பொதுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக மூன்றாவது முறையாக உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. உ.பி. யிலிருந்து 80 எம்.பி.க்கள் மக்களவைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து