முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரியை விலக்குவது என டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

18 சதவீதமாக...
டெல்லியில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-வது கூட்டம் நேற்று நடந்தது. அதில், பிரிட்ஜ் , வாஷிங் மெஷின்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரியை விலக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னர் ரூ.500 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5 சதவீதம் இருந்ததை ரூ.1000 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக்சி, கிரைண்டர், கைப்பைகள், நகைபெட்டி, மரப்பெட்டிகள், அலங்கார கண்ணாடிகள், லித்தியம் பேட்டரிகள், வாக்கம் கிளீனர் ஆகிய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கற்கள், மார்பிள், மரச்சிற்பங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் யூரியாவிற்கு 5 சதவீதமாக ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது.

27-ம் தேதி முதல்...
அசாம், சிக்கிம், அருணாச்சலபிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநில வர்த்தகர்களுக்கு ஜி.எஸ்.டி சலுகை அளிக்கப்படும் என்றும் அசாம், சிக்கிம் வர்த்தகர்களுக்கு ஜி.எஸ்.டி சலுகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு காலாண்டு தோறும் வரிகணக்கு தாக்கல் செய்வதில் சலுகையும், இனி மாதந்தோறும் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, பார்லிமென்ட்டில் திருத்தம் செய்யப்பட்ட 46 இனங்களுக்கு ஜி.எஸ்.டி., கவுன்சிலில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிகித மாற்றங்கள் வரும் 27-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஜி.எஸ்.டியின் கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வரவேற்கத்தக்கது...
இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில் விதிக்கப்படும் (ஐ.ஜி.எஸ்.டி) ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியானது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் சமமாக பிரித்துத் தரப்பட வேண்டும். இதுவரையில் வழங்கப்பட வேண்டிய இதன் நிலுவைத் தொகையை, வரும் ௩௧ம் தேதிக்குள், தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. சட்டத்தீன் கீழ், மேல்முறையீடு செய்வதற்கான தேசிய அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மண்டல மையம் சென்னையில் அமைக்கப்படவுள்ளது வரவேற்கத்தக்கது.

விரைந்து நடவடிக்கை...
வரி செலுத்துவோருக்கு பயனளிக்க கூடிய வகையில் மாதாந்திர விவபர அறிக்கையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் 17 கைவினைப் பொருட்கள் மீது, வரிவிலக்கு மற்றும் வரிகுறைப்பு செய்வது குறித்து மத்திய அரசு, விரைந்து முடிவெடுக்க வேண்டும். விவசாய சேவைகள், கூட்டுறவு வங்கி சேவைகள், காப்பீட்டு சேவைகள், கல்வி நிறுவனம் சார்ந்த சேவைகள், சிட்பண்டு சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு மற்றும் வரிகுறைப்பு செய்வது குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து