முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 அமைச்சர்கள் விசேஷ பூஜை செய்து மலர் தூவினர் - காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறப்பு - தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

திருச்சி : காவிரி டெல்டா சாகுபடி பாசனத்திற்காக நேற்று கல்லணையில் இருந்து 17 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் 5 அமைச்சர்கள் கலந்து கொண்டு விசேஷ பூஜை செய்து மலர் தூவி கல்லணையில் இருந்து நீரை திறந்து விட்டனர். 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் தாண்டியதால் காவிரி டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேறுகிறது. அணைக்கு விநாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம்  மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் மாயனூர் கதவணையில் இருந்து 19 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலையில் உள்ள வாத்தலை அணையை வந்தடைந்தது. பின்னர் முக்கொம்பு அணையை சென்றடைந்த அந்த தண்ணீர்  வேகமாக பாய்ந்தோடி திருச்சிக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணை நோக்கி காவிரி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

முன்னதாக காவிரி நீர் வருவதையொட்டி முக்கொம்பு மேலணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டது. முக்கொம்பில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். அந்த தண்ணீர் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு திருச்சி சிந்தாமணியை தாண்டி தஞ்சை மாவட்டம் கல்லணையை நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது.

தொடர்ந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக நேற்று காலை 11 மணிக்கு அணையை ஒட்டி அமைந்துள்ள விநாயகர், ஆஞ்சநேயர் கோவில்களில் மேளதாளம் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் எம்.பி. வைத்திலிங்கம், தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை, அரியலூர் மாவட்ட கலெக்டர்கள், விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு கல்லணையில் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர். இதில் காவிரியில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றில் விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியும், கல்லணை கால்வாயில் விநாடிக்கு ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன் பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை திறப்பை காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து சீறிப் பாய்ந்து வரும் நீரின் அழகை செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீரின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 118 அடியையும் தாண்டி விட்டது. கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து நேற்று 33, 333 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 47 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அநேகமாக இன்று காலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து