Idhayam Matrimony

ஆயுள் பலத்தை கூட்டிடும் ஆடி அமாவாசை விரதம்

புதன்கிழமை, 25 ஜூலை 2018      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக் கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள்.

விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும்.
அமாவாசை, பவுர்ணமி திதிகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டு விரதங்களும், முறையே காலமான தாய், தந்தை ஆகியோரை குறித்து அவர்கள் நற்கதியடைய அவர்களின் பிள்ளைகளால் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். சூரியனை பிதுர்க்காரகன் என்றும், சந்திரனை மாதூர்க்காரகன் என்றும் அழைக்கிறார்கள்.

இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் பாவங்கள் விலகும். தீவினைகள், கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும்.

ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை திதி, பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. அமா என்றால் ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்தது என்று பொருள். வாசி என்றால் சாதகமான அல்லது வாய்ப்பான என்னும் கருத்தில் வருகிறது. ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். அத்துடன் தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாக உள்ளனர். பூமியில் உள்ளவர்களை பொறுத்தமட்டில் ஒவ்வொரு அமாவாசையும் முக்கியமானது. பிதுர் கருமத்திற்கு உகந்த நாள்.

சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் உறையும் பிதுர் லோகம் உள்ளது. ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம். நோயின்றி சுகமாக வாழவும், சகல செல்வங்களையும் பெற்று இனிதாக வாழவும் பிதுர்க்களை திருப்தி செய்ய வேண்டும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை போட்டு, அவர் களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க, கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்து விட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை மூதாதையர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்தமானவர்கள் அணிந்து கொள்ளலாம்.

அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை ஆகஸ்ட் 11-ம் தேதி சனிக்கிழமை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

. செல்வராஜ்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து