திருப்புல்லாணி அருகே நிலத்தில் நீண்ட விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு

புதன்கிழமை, 25 ஜூலை 2018      ராமநாதபுரம்
rmd news

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நிலத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது கோரைக்கூட்டம் ஊராட்சிக்குட்பட்ட வலையனேந்தல் கிராமம். இங்கு காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருந்து வரும் கருப்பையா என்பவரின் மனைவி காமாட்சி என்பவர் நேற்று காலை எழுந்து அந்த பகுதியில் வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் கால் வைத்த இடத்தில் நிலத்தில் திடீரென்று விரிசலுடன் மணல் சரிவு ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரத்திற்கு இந்த விரிசல் ஏற்பட்டிருந்ததும் மணல் உள்சென்றபடி இருந்ததும் தெரிந்தது. இதனால் அவர் கத்தி கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது விரிசல் நீண்ட தூரத்திற்கு ஏற்பட்டிருப்பதும், அதனுள் ஒரு மீட்டர் ஆழத்திற்கு சிறிது சிறிதாக மணல் உள்ளே சென்று கொண்டிருப்பதும் தெரிந்தது. இதனால் அந்த பகுதியில் குடியிருந்தவர்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் உதவி நிலஅமைப்பியல் அலுவலர் சுகதா ரஹீமா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்துஅந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
       இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்த பகுதியில் கள ஆய்வு செய்ததில் இது சாதாரண பாதிப்புதான் என்பது தெரியவந்துள்ளது. நிலத்தில் நீர்தன்மை குறைந்துள்ளதால் களிமண் தரையில் உள்பகுதியில் விரிசல் ஏற்பட்டு மேல் பகுதியில் அந்த விரிசல் உருவாகி உள்ளது. இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கூறினார். பாதிக்கப்பட்ட அப்பகுதியினர் இந்திய இயற்கை எரிவாயு கழகத்தினர் இந்த பகுதியில் அதிகளவில் எரிவாயு எடுத்து வருவதால் பூமிக்கடியில் வெற்றிடம் ஏற்பட்டு அதன்காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளதாக அச்சமடைந்துள்ளோம். எங்களுக்கு பயமாக உள்ளது என்று தெரிவித்தனர். மேலும், அப்பகுதியினர் உடனடியாக தங்களின் குழந்தைகளுடன் வீடுகளில் இருந்து வெளியேறி ஊருக்கு வெளியில் மரத்தடியில் தஞ்சம் அடைந்தனர். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்டு பயத்துடன் உள்ள மக்களின் அச்சத்தை போக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பத்தை தொடர்ந்து திருப்புல்லாணி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து