சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை:

வியாழக்கிழமை, 26 ஜூலை 2018      மதுரை
sathurakiri news

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் சதுரகிரி மலையிலுள்ள புகழ்பெற்ற சுந்தரமகாலிங்கம் கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மதுரை,விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மதுரை மாவட்டம் சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் உள்ளது.இங்கு வருகின்ற ஆடி மாதம் 26-ம்தேதி(11.8.18) அன்று நடைபெறுகின்ற ஆடிஅமாவாசை திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சதுரகிரி மலையில் ஏறிச் சென்று அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமியை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இவ்விழாவில் பங்கேற்றிடும் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்திட மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடிஅமாவாசை திருவிழாற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ்,விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் மற்றும் இருமாவட்ட கூடுதல் கலெக்டர்கள்,காவல்துறை,வனத்துறை,சுகாதாரத்துறை,போக்குவரத்துக்கழகம்,போக்குவரத்து துறை,வருவாய்துறை,உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சுமார் 5லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக பல்வேறு ஒருங்கிணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள போதும் அவற்றினை ஒருங்கிணைத்து நடத்திட தலைமை ஒருங்கிணைப்பாளரை நியமித்திட வேண்டும்.வரும் 8-ம் தேதி முதல் மலைக் கோவிலுக்கு சென்று தங்கி ஆடிஅமாவாசை திருவிழாவில் பங்கேற்பதற்காக அங்கேயே தங்கி விடுவார்கள்.அவ்வாறு மலையிலே தங்கி இருக்கும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதரவேண்டும்.பக்தர்கள் சென்றிடும் வழிகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு அனைத்து வசதிகளும் கொண்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் சேவை மையம் அமைத்திட வேண்டும்.
சிக்கலான பாதை அமைப்பு கொண்ட இடங்களில் பக்தர்கள் சிரமப்படாத வகையில் அந்த இடங்களில் எச்சரிக்கை போர்டுகள் அமைத்து அங்கே அலுவலர்களை பணியமர்த்திட வேண்டும்.கோவிலுக்கு வருகை தரும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தேவையான வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்திட வேண்டும்.இந்த ஆண்டு ஆடிஅமாவாசை திருவிழா எந்தவித அசம்பாவிதமுமின்றி நடைபெற்றி அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து சிறப்புடன் செயலாற்றிட வேண்டும்.அதே போல் பிளாஸ்டிக் பொருட்களுடன் மலையேறிட வருகை தரும் பக்தர்களுக்கு அதன் தீமைகள் குறித்து எடுத்துக்கூறி விளக்கமளிப்பதுடன் துணிப்பைகளை இனிமேல் பயன்படுத்திடுமாறு கனிவுடன் வேண்டுகோள் விடுத்திட வேண்டும்.அதே சமயம் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பக்தர்களுக்கு தேவையான குடிநீர்,போக்குவரத்து,மருத்துவவசதி,பாதுகாப்பு,உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்புடன் செய்தந்திட முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருவதாக கூறினார்.
முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்,விருதுநகர் மாவட் ஆட்சியர் சிவஞானம் மற்றும் அதிகாரிகள் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தமகாலிங்கம் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு விளக்கி கூறினார்கள்.இந்நிகழ்ச்சியில் இரு மாவட்டங்களில் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து