அழகர்கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா பக்தர்கள் குவிந்தனர்.

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2018      மதுரை
alagarkovil news

அழகர்கோவில் -   மதுரை மாவட்டம் அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும்.இந்த விழாவானது கடந்த 19ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் தினமும் அன்னம், சிம்மம், அனுமார், கெருடன், சேஷ, யானை, குதிரை, போன்ற வாகனங்களில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேரோட்ட திருவிழா நேற்று காலை நடந்தது.இதில் அதிகாலை 5மணிக்கு கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் போய் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.
    தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவள்ளி முன் செல்ல சாமியாட்டத்துடன் உடன் சென்ற பக்தர்களின் கோவிந்தா கோஷம்முழங்க பக்தி பரவசத்துடன் சென்றனர்.பின்னர் நாட்டார்கள் திருத்தேரில்  நான்கு திசைகளிலும் இருந்து வெள்ளை வீசியதை தொடர்ந்து  ஆயிரக்கணக்கானோர் தேரின் வடங்களை காலை 6.20மணிக்கு பிடித்து இழுத்து சென்றனர்.   தேரோடும் வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரளாக காணப்பட்டனர்.தொடர்ந்து காலை 8.55 மணிக்கு திருத்தேர் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிலையை அடைந்தது.தொடர்ந்து சுவாமிக்கு நூபுரகங்கை தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனைகளும் நடந்தது.
     இந்த திருவிழாவில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்டகலெக்டர் கொ.வீரராகவராவ், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ.பெரியபுள்ளான்,கள்ளழகர் கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, வெள்ளியங்குன்றம் ஜமின்தார் சண்முகராஜ புலிகேசிபாண்டியர், மற்றும் அறநிலையத்துறை, வருவாய்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டு தேரோட்ட தொடக்கத்திலிருந்து முடியும் வரை பக்தர்களோடு பக்தர்களாக கலந்துகொண்டு திருத்தேரின் வடங்களை இழுத்து வந்தது குறிப்பிடதக்கது ஆகும். இந்த ஆடிதேரோட்ட திருவிழாவை காண மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, சென்னை, உள்ளிட்ட பல மாவட்டப்பகுதி ம்ற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.மாலையில் பூப்பல்லாக்கு விழாவும் நடந்தது. 28ந் தேதி இன்று சப்தாவர்ணம் புஷ்பசப்பரமும் 29ந்தேதி உற்சவசாந்தியுடன் ஆடித்திருவிழா திருவிழா நிறைவுபெறுகிறது.
   முன்னதாக ஆடிதேரோட்ட திருவிழா அன்று விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்தினர்.திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் சம்பாசாதம், தோசையை விரும்பி வாங்கி சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து