பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை அமைக்க சோனியாவை சந்திக்கிறார் மம்தா பேனர்ஜி

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      அரசியல்
Mamata(N)

புதுடெல்லி, பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அணியை அமைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டாட்சி முன்னணியில் காங்கிரஸை சேர்க்க மம்தா பானர்ஜி முதலில் தயக்கம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மம்தா பானர்ஜி மாற்றிக் கொண்டு, காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வெளிப்படையாக ஆர்வம் காட்டி வருகிறார்.
டெல்லியில் மம்தா பானர்ஜி 3 நாள்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்துக்கு மம்தா பானர்ஜி இன்று செல்கிறார். அங்கு அவர், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசலாம் எனத் தெரிகிறது. சோனியா காந்தியுடனான மம்தா பானர்ஜி சந்திப்புக்கு முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை. எனினும், அவரை சந்தித்துப் பேச மம்தா முயற்சிப்பார். அவரை சந்திக்கும்போது, கொல்கத்தாவில் கூட்டாட்சி முன்னணியின் சார்பில் ஜனவரி மாதம் 19ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளார்.

இதேபோல், டெல்லி பயணத்தின்போது முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசவுள்ளார். அவர்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் ராம்ஜேத் மலானி, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருகன் சின்ஹா ஆகியோரும் அடங்குவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து