குடகனாற்றில் ரூ.1.80 கோடி செலவில் தடுப்பணை கட்ட உதவிய அமைச்சர் சி.சீனிவாசனுக்கு விவசாயிகள் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      திண்டுக்கல்
dgldam1 news

திண்டுக்கல் - திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்கத்திலிருந்து மழை காலத்தில் அணை நிரம்பி மருகால் வழியாக வெளியேறும், உபரிநீர் குடகனாற்று வழியாக வேடசந்தூர் வரை செல்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக பருவமழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் ஆத்தூர் வட்டார விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆத்தூர் வட்டார விவசாயிகளின் நலன் கருதியும், குடகனாற்று கரையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடிதண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படும் ஊராட்சிகளான சீவல்சரகு, எஸ்.பாறைப்பட்டி, வக்கம்பட்டி, ஆத்தூர், அம்பாத்துரை, பச்சமலையான்கோட்டை, வீரக்கல் ஆகிய ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி, தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமியிடம், ஆத்தூர் ஒன்றியம், செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சி பகுதியில் குடகனாற்றில் தடுப்பணை கட்ட வேண்டுகோள் விடுத்தார்.
        வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோளை ஏற்று ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் குடகனாற்றில் தடுப்பணை கட்ட உத்தரவிட்டுள்ளார். அதன்படி குடகனாற்றில் வேலகவுண்டன்பட்டி என்ற இடத்தில் 120 மீட்டர் அகலத்தில், 70 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தடுப்பணையில் தண்ணீர் தேங்குமாறு 800 மீட்டர் நீளத்திற்கு பக்கவாட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 4 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைகிறார்கள். இதுகுறித்து ஆத்தூர் வட்டார விவசாயிகள் கூறுகையில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எங்கள் பகுதி விவசாயிகள் நலன் கருதி தடுப்பணையை கட்ட உதவியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பகுதி விவசாயிகளின் நலன்கள் பாதுகாப்பதோடு. நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப்படுகிறது. சுமார் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் இப்பகுதியில் போடப்பட்டு கிராம ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தடுப்பணை மூலம் தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் என்றனர். தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து