முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாரடைப்பால் மரணமடைந்த ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. உடலுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். நேரில் அஞ்சலி

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நேற்று மாலையில் இறுதிச் சடங்கு நடைபெற்று ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ.வின் உடல் கீரைத்துறை மூலக்கரை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உடல் நிலை பாதிப்பு...

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே.போஸ். இவரது வீடு மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் உள்ளது. இவர் சர்க்கரை நோய் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போஸூக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மதுரை எல்லீஸ்நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக  தெரிவித்தனர். அவருக்கு வயது 69. இதைத்தொடர்ந்து அவரது உடல் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மலர்வளையம்...

ஏ.கே.போஸூசின் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை விரைந்து வந்தனர். ஏ.கே.போஸூசின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஏ.கே.போஸூசின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பிரமுகர்களும், அனைத்து கட்சி பிரமுகர்களும் ஏ.கே. போஸ் இல்லத்திற்கு விரைந்து சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஏ.கே. போஸ் மறைவு செய்தி கேட்டு கட்சியினர் சோகமடைந்தனர். அவர்களும் அவரது இல்லத்திற்கு விரைந்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அஞ்சலி

இந்த நிலையில் ஏ.கே.போஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று ஏ.கே.போஸின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ,  ஆர்.பி.உதயகுமார், காமராஜ்,  எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசு கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோரும் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதி சடங்கு...

பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் நேற்று மாலை இறுதி சடங்கு நடைபெற்றது. ஏ.கே.போஸின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதுரை கீரைத்துறையில் உள்ள மின்மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது.  அங்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஏ.கே. போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்கலங்கியபடி நா தழுதழுக்க பேசினார். ஏ.கே. போஸின் தொண்டுகளை பற்றி அவர் விவரித்தார். ஏ.கே.போஸ் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை என்றும் அவர் கூறினார். 

நிர்வாகிகள் அஞ்சலி...

முன்னதாக அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.தங்கமணி, கே.பி.அன்பழகன், வெல்லமண்டி நடராஜன், பாலகிருஷ்ணாரெட்டி, வளர்மதி, ராஜலெட்சுமி, நிலோபர் கபில், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, பெரியபுள்ளான், மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.முத்துராமலிங்கம், கே.தமிழரசன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் மா.இளங்கோவன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மலர் வளையம், மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மரணமடைந்த ஏ.கே.போஸூசிற்கு மனைவி பாக்கியலெட்சுமி, மகன்கள் சிவசுப்பிரமணியன், சங்கர், மகள்கள் டாக்டர் ஜெயலட்சுமி தேவி, ஜெயகார்த்திகா ஆகியோர் உள்ளனர்.

வாழ்க்கை வரலாறு

ஏ.கே.போஸ் 1972 – ம் ஆண்டு முதல் கட்சி பணி ஆற்றி வந்தார். எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராகவும், இணைச்செயலாளராகவும் பணியாற்றினார்.  கடந்த 2003 முதல் 2006 வரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். 2004–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க . வேட்பாளராக மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2006–ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011–ம் ஆண்டு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து  2016–ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 3 - வது முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்த நிலையில் ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து