முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சிக்கு விசுவாசமாக இருந்து 'அம்மா' மனதில் இடம்பிடித்தவர் ஏ.கே.போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் முதல்வர் எடப்பாடி பேட்டி

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : கட்சிக்கு விசுவாசமாக இருந்து அம்மா மனதில் இடம் பிடித்தவர் ஏ.கே. போஸ் என்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது,

விசுவாசமாக...

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைத்த காலத்திலிருந்து, மறைந்த மரியாதைக்குரிய சட்டப் பேரவை உறுப்பினர் போஸ், அப்பொழுதே தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டு விசுவாசமிக்க தொண்டனாக பணியாற்றியவர், அம்மாவிடத்திலே நன்மதிப்பைப் பெற்றவர். மறைந்த சட்டப் பேரவை உறுப்பினர் அண்ணன் போஸை, அம்மா குறிப்பிடும் பொழுது, கழகத்திற்கு பணியாற்றியவர், கழகத்திற்கு விசுவாசமாக இருந்து செயல்பட்டவர் என்று பெருமையாக குறிப்பிடுவார்கள். அந்த அளவிற்கு, மறைந்த போஸ் அம்மாவின் மனதிலே இடம் பிடித்திருந்தார்.

மூன்று முறை...

அவர் கழகத்திலே, மாவட்டக் கழக அவைத்தலைவராகவும், மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், மாவட்டக் கழக செயலாளராகவும் இருந்து சிறந்த முறையிலே கட்சிப் பணியாற்றியவர். தன்னுடைய உழைப்பால், கட்சியினரிடத்திலே, தலைமையிலே, நன்மதிப்பைப் பெற்றார்.  அம்மா உள்ளத்தில் இடம்பெற்று, 2006-ல் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியிலே, அம்மாவினுடைய ஆசியிலே போட்டியிட்டு வெற்றி பெற்றவர், அவர் 2011-ல் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற்றவர், 2016-ல் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அம்மாவின் ஆசியோடு, மக்களுடைய செல்வாக்கைப் பெற்று மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, சிறப்பான முறையிலே பணியாற்றி, மக்களிடத்திலே நன்மதிப்பைப் பெற்ற மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் போஸின் உயிர், மாரடைப்பால் பிரிந்துள்ளது,

கோரிக்கைகள்...

உண்மையிலே நாங்கள் வேதனை அடைகின்றோம், வருத்தப்படுகின்றோம். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற காலத்திலே, மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்ய வேண்டுமென்று அம்மாவிடத்திலே, அடிக்கடி கோரிக்கை வைப்பார். இப்பொழுது, நான் முதலமைச்சராக இருக்கின்ற காலத்திலும், அவருடைய சட்டமன்றத் தொகுதியில் இருக்கின்ற மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென்று என்னிடத்திலே பல கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பார்.

பேரிழப்பு...

அதேபோல, கட்சியினரிடத்தில் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டு, அவர்களுடைய அன்பைப் பெற்று விசுவாசமாக உழைத்த, ஈடு, இணையற்ற மறைந்த சட்டப் பேரவை உறுப்பினர் போஸ் இயற்கை எய்தியது எங்களுக்கு, எங்களுடைய கழகத்திற்கு பேரிழப்பு என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி,  அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரோடு பல ஆண்டுகாலமாக இணைந்து செயல்பட்ட கழகத் தொண்டர்களுக்கும் கழகத்தின் சார்பாக, என்னுடைய சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.ஆர். விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து