முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோலி சதத்தால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது.

 285 ரன்கள்...

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் (80 ரன்), பேர்ஸ்டோ (70 ரன்) அரைசதம் அடித்தனர்.

அஸ்வின்...

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே முகமது ஷமியின் பந்து வீச்சில் சாம் குர்ரன் (24 ரன்) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

முரளி விஜய்...

பின்னர் இந்திய அணியின் முதல் இன்னிங்சை முரளி விஜயும், ஷிகர் தவானும் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்து குடைச்சல் கொடுத்தனர். அவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் (13.4 ஓவர்) பிரிந்தது.

இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 20 வயது சாம் குர்ரனின் பந்து வீச்சில் முரளிவிஜய் (20 ரன், 45 பந்து, 4 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார். அதே ஓவரில் அவரும் காலியானார். ஆப்-சைடுக்கு வெளியே சென்ற பந்தை அடித்த போது, அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்னுடன் நடையை கட்டினார்.

கார்த்திக் ஏமாற்றம்

அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். மறுமுனையில் தட்டுத்தடுமாறிய ஷிகர் தவானுக்கும் (26 ரன், 46 பந்து, 3 பவுண்டரி) குர்ரன் ‘செக்’ வைத்தார். அவரது பந்தில் ஷிகர் தவான் ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரஹானே களம் இறங்கினார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 76 ரன்களுடன் பரிதவித்தது.

அணியின் ஸ்கோர் 27.4 ஓவர்களில் 100 ரன்னை எட்டிய போது ரஹானே (15 ரன், 34 பந்து, ஒரு பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஜென்னிங்சிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (0) வந்த வேகத்திலேயே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பாண்ட்யா 22 ரன்

இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். ஹர்திக் பாண்ட்யா ரன் கணக்கை தொடங்கும் முன்பே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் அவுட் கொடுத்தார். அப்பீல் செய்ததில் அவர் அவுட்டில் இருந்து தப்பினார். அடுத்த ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை விராட்கோலி அடித்து ஆட முயல அது எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானை நோக்கி சென்றது. அவர் அந்த அருமையான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். அப்போது விராட்கோலி 21 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்த ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்தார். இந்த முறை ஸ்லிப்பில் நின்ற அலஸ்டயர் குக் நல்ல கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார்.

ரன் கணக்கை தொடங்கும் முன்பே 2 முறை ‘அவுட்’ ஆபத்தில் இருந்து அதிர்ஷ்டவசத்தால் தப்பிய ஹர்திக் பாண்ட்யா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஹர்திக் பாண்ட்யா 52 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன் எடுத்த நிலையில் குர்ரன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.

விராட்கோலி சதம்

இதனை அடுத்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கேப்டன் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 100 பந்துகளில் 9 பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டினார். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து அஸ்வின் (10 ரன், 15 பந்து, 2 பவுண்டரி), முகமது ஷமி (2 ரன்) ஆகியோர் விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா (5 ரன்) அடில் ரஷித் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து உமேஷ் யாதவ் களம் இறங்கினார்.

ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஆடிய விராட்கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார். முதலில் சற்று தடுமாறியதுடன், கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய விராட்கோலியின் ஆட்டம் போகப்போக சூடுபிடித்தது. நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி, 65-வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் பவுண்டரி விரட்டி சதத்தை எட்டினார். அவர் 172 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் விராட்கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். சதம் அடித்ததும் உரக்க சத்தமிட்ட விராட்கோலி தனது கழுத்தில் செயினில் அணிந்து இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தார்.

இந்திய அணி 274 ரன்

சதம் அடித்த பிறகும் விராட்கோலி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அடில் ரஷித் பந்து வீச்சில் ஷாட் பிட்ச் ஆகி வைடாக சென்ற பந்தை விராட்கோலி அடித்து ஆடினார். அது ஸ்டூவர்ட் பிராட் கையில் தஞ்சம் அடைந்தது. விராட்கோலி 225 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 149 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 76 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. உமேஷ் யாதவ் 1 ரன்னுடன் (16 பந்துகளில்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

2-வது இன்னிங்ஸ்...

13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேரம் முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 14 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து