முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடுகளில் பிரசவம் பார்த்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

வீடுகளில் பிரசவம் பார்த்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், ரெங்கநாதபுரத்தில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது,

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு சிறந்த முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. இதனால் பிரசவத்தின் போது குழந்தைகள் மற்றும் தாயார் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. சிறந்த முறையில் மருத்துவம் பார்த்தால் வசதி படைத்தவர்கள் கூட அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது, சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்ப்பது போன்றவை நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும். இதனை மீறி வீடுகளில் பிரசவம் பார்ப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுகமான பிரசவம், தாய் சேய் நல பாதுகாப்பில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். தமிழகத்தில் அனைத்து பிரசவங்களுமே மருத்துவமனைகளில் தான் நிகழ்கின்றன. இதில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

வீடியோ காட்சிகளைப் பார்த்து விட்டோ, திரைப்படங்களைப் பார்த்து விட்டோ, பிரசவம் பார்க்கலாம் என்பது அறிவார்ந்த செயல் அல்ல. கர்ப்பிணித்தாயின் உயிருக்கு ஊறு விளைவிக்கும். இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியது என எச்சரிக்கப்படுகிறது. கணவனையும், குடும்பத்தாரையுமே சார்ந்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ சேவை தேவைப்படும் போது அறியாமையாலோ அல்லது வேறு காரணங்களினாலோ மருத்துவ சேவை கிடைக்காமல் தடுப்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து