முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறு, குறு தொழில் துறையினர் தாமதமாக செலுத்தும் ஜி.எஸ்.டி வரிக்கு அபராதம் விதிக்கக் கூடாது - டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சிறு, குறு தொழில் துறையினர் தாமதமாக செலுத்தும் ஜி.எஸ்.டி வரிக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

29-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டம் புதுடில்லியில் நேற்று நடைபெற்றது,.இந்த கூட்டத்தில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலசந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர், வணிகவரி ஆணையர் டி.வி.சோமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு மன்ற கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளை கண்டறியும் பொருட்டு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் தலைமையில் கடந்த 26-ம் தேதி சென்னையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் அமலாக்கத்திற்கு பின்பு அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சில இடர்பாடுகள் மற்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் மேற்கொள்ளும் சேவைகள் மீது வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடமிருந்து வரப்பெற்ற அத்தனை கோரிக்கைகளும் துறை அளவில் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு கீழ்காணும் இனங்கள் மன்றத்தின் பரிசீலனைக்காக அமைச்சர் ஜெயக்குமார் கூட்டத்தில் முன்வைத்தார்.

இதில் குறிப்பிடத்தக்க கோரிக்கைகள் பின்வருமாறு:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை தொடர்பான சில்லறை வேலைகள் மீது தற்போது 18 சதவீதம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படுவதால் அவர்களுடைய நடப்பு மூலதனமானது முடங்கி விடுகிறது. இந்த துறையைச் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் சில்லறை வேலை தொடர்பான செலுத்தங்கள் மூன்று மாத இடைவேளைக்குப் பின்புதான் அவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறது. இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை தொடர்பான சில்லரை வேலைகள் மீது ஜவுளி தொழில் தொடர்பான சில்லரை வேலை மீதான வரியினை குறைத்தது போன்று 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்திட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு பயனளிக்கக் கூடிய வகையில் தற்போது இருந்து வரும் மாதாந்திர விவர அறிக்கை தாக்கல் செய்யும் முறையினை மேலும் எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விற்பனைத் தொகை 5 கோடிக்குள் உள்ள வரி செலுத்துவோர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கும், ஆனால் மாதந்தோறும் வரி செலுத்த வேண்டும் என்பதும் இந்த கருத்துருக்களில் ஒன்றாகும். இந்நேர்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையை சார்ந்தவர்களால் தாமதமாக செலுத்தப்படும் வரியின் மீதான வட்டியின் விகிதத்தை ரூ. 12-ஆக குறைத்திட வேண்டும். மேலும் மூன்று மாதத்திற்குள்ளாக தாமதமாக தாக்கல் செய்யப்படும் விவர அறிக்கை மீது விதிக்கப்படும் தாமத கட்டணத்தை(அபராதம்) தவிர்த்திட வேண்டும். ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டிய விவர அறிக்கையானது பிறரை சார்ந்திராமல் சுயமாக தாக்கல் செய்திடும் வகையில் அதன் அமைப்பானது எளிமையாக வடிவமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் ஏறத்தாழ 50 சதவீத அளவிற்கான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகையால் இத்துறையை சார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு தங்குதடையின்றி ரீபண்ட் வழங்கிட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பின், தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் அனைத்தும் அவ்வப்போது களையப்பட்டு வருகின்றன. இருப்பினும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினை சார்ந்தவர்களால் எதிர்கொள்ளப்படும் சில குறிப்பிட்ட தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டுமென கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

வாகனத் தயாரிப்பு தொழிலில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. வாகன உதிரிப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் தொழில் உள்ளீடுகள் என்ற பெயரில் 5 சதவீதம் மட்டுமே வரி செலுத்தி வந்தனர். மேலும், இவர்கள் மத்திய கலால் வரி விதிப்பிற்கும் உட்படாமல் இருந்து வந்தனர். ஆனால் ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்குப் பின், உயர் வரி விகிதமான 28 சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இவர்களுடைய நடப்பு மூலதனமானது முடங்கி விடுகிறது. வாகன உதிரிப் பொருட்கள் என்பன தொழில் உள்ளீடுகள் என்பதனால் இவற்றின் மீதான 28 சதவீத வரி விதிப்பினை 18 சதவீதமாக குறைத்திட வேண்டுமென நேற்றைய கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை கிட்டத்தட்ட 6000 பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த துறையால் உற்பத்தி செய்யப்படும் பல பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு மற்றும் விலக்களிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியினை குறைப்பதற்கும் மற்றும் விலக்களிப்பதற்கும் தமிழ்நாடு தொடர்ந்து மன்றக் கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், நேற்றைய கூட்டத்திலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினால் உற்பத்தி செய்யப்படும் கீழ்க்காணும் பொருட்கள் மீதான வரியினை குறைப்பதற்கு மற்றும் விலக்களிப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

கைத்தறி மற்றும் விசைத்தறி பொருட்கள், கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிகச் சின்னம் இடப்பட்ட அரிசி மற்றும் இதர உணவு தானியங்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, ஆட்டா சக்கிக்கு இணையாக கிரைண்டர் மீதான வரியினை நிர்ணயித்தல், ஊறுகாய், வெண்ணெய், நெய், விவசாயக் கருவிகள், ஜவுளித் தொழிலில் பயன்படும் இயந்திர பாகங்கள், பம்பு செட்டுகள், மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள், மரவள்ளிக் கிழங்கு ஸ்டார்ச்,  வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள், பேக்கரி பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள்; பல்வேறு வகையான வத்தல்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பிஸ்கட்டுகள், உரம், நுண் ஊட்டச் சத்துகள், இயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சை கொல்லிகள், கற்பூரம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா, மஞ்சள் போன்றவை மற்றும் அதன் பொடிகள், சீயக்காய், கடித உறை, அட்டைகள், டயரிகள் பயிற்சி குறிப்பு மற்றும் கணக்கு புத்தகம் போன்ற காகிதப் பொருட்கள், பாலியஸ்டர் /நாரினால் ஆன நெய்யப்படாத பைகள், காதிப் பொருட்கள், கழிவு செய்யப்பட்ட டயர்கள், வெளுப்பதற்கான திரவம், பவானி தரைவிரிப்பு, கட்டுமானப் பொருட்கள், மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், வேப்பம் பிண்ணாக்கு, அரிசி தவிடு மீது வரி விலக்கு அல்லது எதிரிடை கட்டணமாக மாற்றல், வெள்ளி மெட்டி, தாலி போன்றவை அலுமினிய பாத்திரங்கள் மற்றும் அலுமினிய கழிவுகள், பட்டு நூல் மற்றும் சரிகை, தேங்காய் நார் பொருட்கள், செங்கல் மீது இணக்க முறையில் வரி செலுத்துதல், இரப்பர் கலந்த நாரினால் செய்யப்பட்ட மெத்தைகள், பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட், மெல்லும் புகையிலை மற்றும் சுருட்டு, கொள்கலனில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கொசு அழிப்பான்கள், மொறுமொறுப்பான ரொட்டித்துண்டு (ரஸ்க்), நன்னாரி சர்பத், பனஞ்சர்க்கரை, வறுத்த கடலை, காலர் துணி, கோவா மற்றும் பால்பேடா, சாம்பிராணி, பனைநார் மற்றும் மட்டைகள், கோரைப் பாய், பனை, தென்னை, பாக்கு, பேரிச்சம், வாழை போன்ற இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தட்டு, குவளை, தொன்னை, பானை போன்ற பொருட்கள், கைவினைப் பூட்டு, பயோ டீசல், சல்லா துணி மற்றும் கட்டு போடும் துணி, மெழுகுவர்த்திகள், சங்கு மற்றும் கடல் சிப்பியாலான கைவினைப் பொருட்கள், ரயில் வாகனம் மற்றும் பாகங்கள் வினியோகம் மீதான உள்ளீட்டு வரி வரவினை அனுமதித்தல், கையால் செய்யப்பட்ட இரும்பு பெட்டி, வாகன உதிரி பாகங்கள், ஐஸ்கீரிம் போன்ற குளிர் பானங்களையும் இணக்கமுறை வரிவிதிப்பில் எதிர்மறை பட்டியலில் சேர்த்தல். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சேவைகள் மீதான வரியினை குறைப்பதற்கும் மற்றும் விலக்களிப்பதற்கும் நேற்றைய கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து