வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை கொள்ளைர்களை விரட்டி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
திண்டுக்கல்,- திண்டுக்கல் அருகே பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி. சக்திவேல் பாராட்டி பரிசு வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகிலுள்ள சந்தன்செட்டிவலசு பகுதியைச் சேர்ந்த அண்ணாத்துரை மனைவி ஈஸ்வரி(45). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அனுப்பப்பட்டு கொள்ளையர்களை தேடினர்.
ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் மூலச்சத்திரம் பீட் காவலர் முத்துச்சாமி இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பியோடினர். முத்துச்சாமி அவர்களை தனது மோட்டார் பைக்கில் ஆண்டரசன்பட்டி அருகே கருப்பிமடத்தில் மறித்து பிடித்தார். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள வெள்ளாளபட்டியைச் சேர்ந்த மோகன் மகன் ராஜ்குமார்(34), பழங்காநத்தத்தைச் சேர்ந்த கார்மேகம் பாலமுருகன்(48) என தெரியவந்தது. மேலும் அவர்கள் ஈஸ்வரியிடம் கொள்ளையடித்த 5 பவுன் தங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.
கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டிப் பிடித்த காவலர் முத்துச்சாமிக்கு மாவட்ட எஸ்.பி. சக்திவேல் பரிசு வழங்கி பாராட்டினார்.