டி.கல்லுப்பட்டி அருகே சிவலிங்கமே ஆலயமாக உள்ள ஸ்ரீ மஹாசித்தர் சிவன்கோவில் கும்பாபிஷேக விழா

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      மதுரை
tmm news

 திருமங்கலம்.- மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வி.குச்சம்பட்டி கிராமத்தில் சிவலிங்கமே ஆலயமாக அமைந்துள்ள ஸ்ரீ மஹாசித்தர்(ஜீவசமாதி) சிவன் கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்கள்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வி.குச்சம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஹாசித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பாக சதுரகிரி சித்தர்கள் வாழும் மலைக்கு யாத்திரையாக வந்த மகான் ஸ்ரீ மஹாசித்தர் அருள்மிகு பாலாம்பிகை அம்மனின் வழிகாட்டுதலின்படி வி.குச்சம்பட்டி பகுதியில் தங்கியிருந்து மக்களுக்கு பல நன்மைகள் செய்து ஒரு ஆடி அமாவாசை தினத்தன்று தவத்தை நிறைவு செய்து அங்கு ஜீவசமாதி அடைந்துள்ளார். இந்த சித்தரின் அருளை பெற்றிடும் வகையில் வி.குச்சம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஹாசித்தர் அறக்கட்டளையின் சார்பில் சிவலிங்கமே ஆலயமாக உள்ள ஸ்ரீ மஹாசித்தர் சிவன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கோவிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக பெருவிழா ஆடிப்பெருக்கு தினத்தன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ மஹாசித்தர் அறக்கட்டளை நிர்வாகி சிவனடியார் முருகேசன் சுவாமிகளின் ஏற்பாட்டின் பேரில் திருமங்கலம் அருள்மிகு சிவஸ்ரீ.எம். சங்கரநாராயணன் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் குழுவினர் தொடர்ந்து இருநாட்கள் திருமறை பாராயணம்,மங்களவாத்தியம்,ஸ்ரீமஹாகணபதி ஹோமம்,ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம்,முதலாம் மற்றும் இரண்டாம் யாகசாலை பூஜைகளுடன் மஹாபூர்ணாஹ_தி தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கலசங்கள் சுமந்து புறப்பாடாகி ஆடிப்பெருக்கன்று காலை 8மணிக்கு மேல் சிம்மலக்கினத்தில் ஸ்ரீ மஹாசித்தர்,பரிவாரமூர்த்திகள் மற்றும் சிவலிங்க கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு வேதமந்திரங்களுடன் மேளதாளங்கள் முழங்கிட மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.பின்னர் மஹாஅபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிவனடியார்களும் பக்தகோடி பெருமக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.அப்போது சின்னத்திரை புகழ் சொற்பொழிவாளர்,சிவனடியார் கனகசுப்புரத்தினம் அவர்கள் ஆன்மீக உரைநிகழ்த்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வி.குச்சம்பட்டி ஸ்ரீ மஹாசித்தர் அறக்கட்டளை நிர்வாகி சிவனடியார் முருகேசன் சிறப்புடன் செய்திருந்ததுடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் திருநீருபூசி ஸ்ரீ மஹாசித்தரின் அருள் பிரசாதம் வழங்கி ஆசிவழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து