டிஎன்பிஎல் 2018 : முதல் குவாலிபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் - மதுரை இன்று மோதல்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Maduraipanthers 2018 8 6

மதுரை : 3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் குவாலிபையர் 1-ல் திண்டுக்கல் - மதுரை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

‘பிளேஆஃப்’ சுற்றுக்கு...

3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் ‘லீக்’ ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிவடைந்தன. கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் திருச்சி வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸையும், முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் 4 விக்கெட்டில் காரைக்குடி காளையையும் தோற்கடித்தன. திருச்சி, தூத்துக்குடி அணிகள் பெற்ற வெற்றி எந்த பலனையும் தரவில்லை. ரன்ரேட்டில் அந்த அணிகள் ‘பிளேஆஃப்’ வாய்ப்பை இழந்தன. கோவை கிங்ஸ், காரைக்குடி காளை அணிகள் ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு நுழைந்தன.

முதல் 2 இடத்தையும்...

திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட்டில் முன்னிலையில் இருந்ததால் திண்டுக்கல் முதல் இடத்தையும், மதுரை 2-வது இடத்தையும் பிடித்தன. கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 4 அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றன. இதில் கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ரன்ரேட்டில் முன்னிலை பெற்று முறையே 3-வது, 4-வது இடங்களை பிடித்து ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன

‘குவாலிபையர் 1’ ஆட்டம்

நேற்று ஓய்வு நாளாகும். ‘பிளேஆஃப்’ சுற்று இன்று தொடங்குகிறது. நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு ‘குவாலிபையர் 1’ ஆட்டம் தொடங்குகிறது. இதில் முதல் இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ்- இரண்டாவது இடத்தை பிடித்த மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். திண்டுக்கல் அணி ஏற்கனவே ‘லீக்’ ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தி இருந்தது. தோற்கும் அணி வெளியேறாது ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.

எலிமினேட்டர் ஆட்டம்

எலிமினேட்டர் ஆட்டம் 8-ந்தேதி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் 3-வது இடத்தை பிடித்த கோவை கிங்ஸ்- நான்காவது இடத்தை பிடித்த காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குவாலிபையர் 1-ல் தோல்வியடைந்த அணியுடன் விளையாடும். தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். கோவை அணி ‘லீக்’ ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளையை வீழ்த்தி இருந்தது. ‘குவாலிபையர் 2’ ஆட்டம் நத்தத்தில் வருகிற 10-ந்தேதியும், இறுதிப் போட்டி சென்னையில் 12-ந்தேதியும் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து