முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் சிகிச்சை பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார்: தொண்டர்கள், குடும்பத்தினர் கண்ணீர்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலையில் காலமானார். இந்த செய்தியை அறிந்ததும் தி.மு.க. தொண்டர்களும், அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

ஒன்றரை வருடமாக ஓய்வு

வயது முதிர்வு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி நள்ளிரவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக இரவோடு இரவாக அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதையடுத்து கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

முக்கிய தலைவர்கள் சந்திப்பு

 இதையடுத்து தமிழக தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். பிறகு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு  சென்னை வந்து மருத்துவமனையில் கருணாநிதியை பார்த்தார். பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்தார். வெங்கையா நாயுடுவும், ராகுலும் கருணாநிதியை நேரில் பார்த்த புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் 2 தினங்களுக்கு முன் சென்னை வந்து காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்தார். ஆனால் அவர் கருணாநிதியை நேரில் பார்த்த படம் மட்டும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் மத்தியில் அப்போதே சந்தேகம் எழுந்தது.

தொடர்ந்து பின்னடைவு

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவரது கல்லீரலின் செயல்பாடு குறைந்த நிலையில் மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியும் தென்பட்டது. ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இதனால் அவரது உடலில் செலுத்தப்பட்ட மருந்துகளும் மெதுவாகவே வேலை செய்தது. இதனால் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை உரிய பலனை அளிக்காததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

சவாலாக உள்ளது..

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டார். அதில் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பின் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பது சவாலாக உள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்துக்குப் பிறகுதான் எதையும் தீர்மானிக்க முடியும் என்று அதில் மருத்துவர் குறிப்பிட்டிருந்தார்.

தயாளு அம்மாள் வருகை

இந்த செய்தி பரவியதும் தி.மு.க. வினர் மீண்டும் காவேரி மருத்துவமனை முன்பு திரளாக திரண்டனர். மிகுந்த சோகத்துடன் அவர்கள் காணப்பட்டனர். மு.க. ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகியோரும் இவர்களுக்கு முன்பாக தயாளு அம்மாளும் மருத்துவமனைக்கு வந்து சென்றனர். தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனைக்கு வந்தார்கள். கூட்டணி கட்சித் தலைவர்களும் வந்து சென்றனர். கருணாநிதியை பார்ப்பதற்காக மதியம் 1.45 மணிக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையின் பின்புற வாயில் வழியாக சக்கர நாற்காலியில் அமரவைத்தபடி தயாளு அம்மாள் உள்ளே அழைத்து செல்லப்பட்டார். பின்னர் 20 நிமிடம் கழித்து அவர் கோபாலபுரம் புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.

உடல்நிலை தொடர்ந்து மோசம்

காவேரி மருத்துவமனை சார்பாக நேற்று முன்தினம் வரை 5 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் நான்கு அறிக்கைகள் சாதகமாக இருந்த நிலையில் 5-வதாக வெளியிடப்பட்ட அறிக்கையில்தான் கருணாநிதி கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது. நேற்று மாலை 4.30 மணியளவில் மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. கடந்த சில மணி நேரங்களாகவே அவரது உடல் உறுப்புகள் மோசமாகி விட்டதாகவும், இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதும் மருத்துவமனை முன்பு கூடியி்ருந்த தொண்டர்கள் கதறி அழுதனர். கருணாநிதி குடும்பத்தினர் குறிப்பாக பெண்கள் ஒவ்வொருவரும் கோபாலபுரம் வந்தனர். கருணாநிதியின் மகள் செல்வி கதறி அழுதபடி கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார்.

முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு

காவேரி மருத்துவமனை அறிக்கை  வெளிவருவதற்கு முன்பு மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது கனிமொழி, அழகிரி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதையடுத்து மாவட்டங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீசாருக்கு டி.ஜி.பி. அவசர உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.10 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
 
கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு

முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்று தனது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்பட்ட முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. இவர், நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையாருக்கு ஜூன் 3-ம் தேதி, 1924-ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.

இளம் வயதிலேயே தம்மை சமூக இயக்கங்களில் இணைத்துக் கொண்ட கருணாநிதி, நீதிக் கட்சியில் இணைந்து, அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரம் காட்டினார். தமிழ்நாட்டில் திராவிட இயக்க மாணவர் அணியை முதன்முதலாகத் தொடங்கியவரும் இவர்தான்.

தாம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதன்முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து இன்று வரை சட்டமன்ற உறுப்பினாராக நீடிக்கிறார். தி.மு.க. துவக்கப்பட்டதிலிருந்து அக்கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வரும் கருணாநிதி, தி.மு.க. தலைவராக ஐம்பதாவது ஆண்டிலும் அடியெடுத்து வைத்து விட்டார்.

இதுமட்டுமல்லாது தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர்.  அண்ணா மறைவுக்குப் பின்னர் 1969-ல் முதல்முறையாக முதலமைச்சரானார். அப்பதவியில் 1971-ம் ஆண்டு வரை நீடித்தார். தொடர்ந்து 1971 முதல் 1976 வரை 2-வது முறையும், 89 முதல் 91 வரை மூன்றாவது முறையும், 1996 முதல் 2001 வரை நான்காவது முறையும், 2006 முதல் 2011 வரை ஐந்தாவது முறையும் முதலமைச்சராக இருந்தார்.

எம்.ஆர். ராதா அளித்த கலைஞர் பட்டம்

அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கருணாநிதிக்கு இன்னொரு முகமும் உண்டு. கலை, இலக்கிய துறைகளில் இடையறாத எழுத்துப்பணி, அவரை ஒரு படைப்பாளியாக உலகம் அடையாளம் கண்டுகொள்ள உதவியது.  தூக்குமேடை நாடகத்தின் போது எம்ஆர் ராதா, கருணாநிதிக்கு அளித்த கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால்  அழைக்கப்படுகிறது.

கனல் பறக்கும் வசனங்களை எழுதியவர்

கருணாநிதி அரசியல் துறையில் மட்டுமல்ல, சினிமா துறையிலும் கொடிகட்டி பறந்தவர். பராசக்தி படத்தில் அவர் எழுதிய கனல் பறக்கும் வசனங்களை இன்றளவும்  யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக, ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற அவரது வசனம் இன்று கேட்டாலும் நம்மை மெய்மறக்க செய்யும். அடுத்து மனோகரா படத்தில் அவர் எழுதிய வசனம் உலகப் புகழ் பெற்றது. பூம்புகார் படத்தில் கண்ணகியாக நடித்த விஜயகுமாரி பேசும் கனல் பறக்கும் வசனங்களை யாரும் மறக்க முடியாது. எம்.ஜி.ஆர். நடித்த மலைக்கள்ளன் படத்திற்கு வசனம் எழுதியதும் கருணாநிதிதான்.

கவிஞரும் கூட...

அவர் வசனகர்த்தா மட்டுமல்ல, சிறந்த கவிஞரும் கூட. பல்வேறு திரைப்படங்களில் அவர் பாடல்களை எழுதியிருக்கிறார். இலக்கிய நடையில் அவர் பேசும் பேச்சுக்களை கட்சியினர் ரசித்து கேட்பார்கள். இப்படி பன்முக திறமை கொண்டவர் கருணாநிதி. அவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமல்ல, அனைத்து துறைக்கும் இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து