முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிச்சடங்கை முன்னிட்டு இன்று பொதுவிடுமுறை: மறைந்த கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராஜாஜி மண்டபத்தில்...

தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படும் என்றும் இறுதி சடங்கு நடைபெறும்நாளான இன்று பொதுவிடுமுறை அறிவித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் முனைவர் கிரிஜாவைத்தியநாதன், வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

ஒதுக்க கோரிக்கை...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, முரசொலி செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது மறைந்த, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் முதலமைச்சரிடம், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள இராஜாஜி ஹாலில் மிக முக்கியபிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செய்யும் பொருட்டு ஒதுக்கவும்; காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அன்னாரை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்தார்.

முதல்வர் உத்தரவு...

இதனிடையில் கலைஞர் மு.கருணாநிதி மறைந்த செய்தியை அறிந்த முதல்வர் எடப்பாடி கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்கள்.

i) மிக முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலை ஒதுக்கீடு செய்யவும், அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளைச் செய்யவும், ii) அன்னாரது இறுதி சடங்கு அன்று (8.8.2018) ஒருநாள் விடுமுறை அளிக்கவும்,

iii) அன்னாருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும்; அத்தருணத்தில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும்; அன்னாரின் மீது தேசிய கொடி போர்த்தி, இராணுவ மரியாதையுடன் குண்டு முழங்க மரியாதையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழ்நாடு அரசு ஏழு நாள் துக்கம் அனுசரிக்கவும், அந்த காலகட்டத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்; அரசு சார்ந்தவிழாக்கள் ரத்து செய்யப்படும் எனவும், தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும்.

நிலம் ஒதுக்கீடு...

காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசுநிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இவ்வாறு தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து