முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் நல்லடக்கம் - தலைவர்கள், பொதுமக்கள், குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடத்துக்குப் பின்புறம் நேற்று இரவு 7 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது தலைவர்கள், பொதுமக்கள், கருணாநிதி குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

குடும்பத்தினர் அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் காலமானார். காவேரி மருத்துவமனையில் இருந்து அவரது உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.  பிறகு கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர். 

ராஜாஜி அரங்கில் அஞ்சலி

பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு கனிமொழி வசிக்கும் சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் திரளான தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் மரியாதை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா மற்றும் பல்வேறு  திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

நடந்தே சென்ற ஸ்டாலின்

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கண்ணாடி பெட்டியில் வைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் ஊர்ந்து சென்றது. இந்த ஊர்வலத்தில் மு.க. ஸ்டாலின் நடந்தே சென்றார். இந்த இறுதி ஊர்வலம் சிவானந்தா சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா நினைவிடத்திற்கு மாலை 6.15 மணியளவில் வந்து சேர்ந்தது. முன்னதாக சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று கலைஞர் வாழ்க என கோஷமிட்டனர். அண்ணா நினைவிடத்துக்கு வந்த பின்னர் அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு கண்ணாடி பெட்டி அகற்றப்பட்டது. அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியும் அகற்றப்பட்டது.

தலைவர்கள் அஞ்சலி

அப்போது அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் ஜெயகுமார், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரசையாக வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கவர்னர் பன்வாரிலால்  புரோகித் அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து மு.க. ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், மகள் செல்வி, ஸ்டாலின் மனைவி துர்கா, கனிமொழி, செல்வம் மற்றும்  பேரன், பேத்திகள் பூப்போட்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். கடைசியாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு சந்தனப்பேழையில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் இறுதி சடங்கு செய்தனர். பின்னர் இரவு சரியாக 6.55 மணிக்கு சந்தனப்பேழை மூடப்பட்டது.

நல்லடக்கம்

அதை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சரியாக 7 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போதும் அவரது குடும்பத்தினர் சில சடங்குகளில் ஈடுபட்டனர். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தின் போது பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், துரைமுருகன், திருச்சி சிவா, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். காலையில் ராஜாஜி மண்டபத்தில் அவரது உடல் இருந்த போது திரையுலக பிரபலங்கள் அனைவரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து