இம்ரான் கான் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு இடைக்கால தடை - பாக். நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      உலகம்
imrankan 2018 07 27

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில், இம்ரான் கானின் வெற்றி பெற்ற லாகூர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு நடத்துவதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ - இன்சாப் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அந்நாட்டின் புதிய பிரதமராக இம்ரான்கான் அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளார்.

இந்தத் தேர்தலில், அவர் 5 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவற்றில், லாகூர் தொகுதியில் அவர் 680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனிடையே, அந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியது.
மேலும், அந்த தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடக் கோரி, லாகூர் உயர் நீதிமன்றத்தில் அந்தக் கட்சி மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், லாகூர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சாகிப் நிஸார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், லாகூர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, தங்களது கோரிக்கையை சம்பந்தப்பட்ட தேர்தல் குறைகள் தீர்ப்பாயத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து