முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பருவமழை தீவிரம் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து, அங்குக் கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி இருப்பதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.

மலப்புரம் மாவட்டத்தில் 5 பேரும், கண்ணூரில் 2 பேரும், வயநாடு மாவட்டத்தில் ஒருவரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர். மேலும் வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் 3 பேரைக் காணவில்லை. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடமலையார் அணையில் இருந்து 600 கனஅடி நீர் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பெரியாற்றில் வெள்ளம் ஓடுகிறது.

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு நகருக்கும், மத்திய மற்றும் வடக்கு கேரளப் பகுதிக்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். கனமழை காரணமாக இடுக்கி, கொல்லம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து