11 ரிசார்ட்டுகளை அடுத்த 48 மணி நேரத்துக்குள் மூட வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      இந்தியா
supreme court 2017 8 3

புது டெல்லி, நீலகிரி வனப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக, யானைகள் நடமாடும் பகுதியில் கட்டப்பட்டுள்ள 11 ரிசார்ட்களை அடுத்த 48 மணி நேரத்துக்குள் மூட தமிழக அரசுக்கு சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி வனப்பகுதியில் உள்ள சோலூர், மசினகுடி, குலாத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகிய பகுதிகள் யானைகள் அதிகம் நடமாடும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக ரிசார்ட்கள், ஓட்டல்கள் கட்டப்பட்டுள்ளன என்று புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் யானை நடமாடும் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள விடுதிகளுக்குத் தடை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி லோக்கூர் தலைமையிலான நீதிபதி அப்துல் நசீர், தீபக் குப்தா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த மனு மீது கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அடுத்த 4 வாரங்களுக்குள் வருவாய்துறையின் இடப்பகுதியில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்களை அகற்றுவதற்கான செயல்திட்டத்தை தாக்கல் செய்யக் கோரி நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோக்கூர் தலைமையிலான நீதிபதி அப்துல் நசீர், தீபக் குப்தா அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அடுத்த 24 மணிநேரத்தில் யானைகள் நடமாடும் பகுதி எனச் சொல்லப்படும் எலிபென்ட் காரிடார் பகுதியில் கட்டப்பட்டுள்ள 11 ஓட்டல்கள், ரிசார்ட்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஆவணங்களை கலெக்டர் ஆய்வு செய்து அந்த ரிசார்ட்கள் சட்டத்துக்கு உட்பட்டு, விதிமுறைகளுக்கு உள்ளாகவே இருந்தால், அவர் முடிவெடுக்கலாம். ஒருவேளைச் சட்டத்துக்கு புறம்பாக, முன் அனுமதியில்லாமல் கட்டப்பட்டு இருந்தால், அடுத்த 48 மணிநேரத்தில் அந்த 11 ரிசார்ட்களையும் மூடி சீல் வைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து