3-வது டி.என்.பி.எல். கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் திண்டுக்கல், மதுரை அணிகள் இன்று மோதல்

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
TNPL dindigul-madurai 2018 8 11

சென்னை : சென்னையில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் மதுரை அணி மோதுகிறது. டிஎன்பிஎல் கோப்பையை வெல்ல இரு அணிகளும் ஆவலுடன் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

3  இடங்களில்...

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி நடைபெற்றது.

லீக் ஆட்டங்கள்

கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. 5-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

‘குவாலிபையர் 1’

‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது. எலிமினேட்டர் போட்டியில் கோவை கிங்ஸ் 24 ரன் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி வெளியேற்றியது. ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி வெளியேற்றியது.

3-வது முறையாக...

டி.என்.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வென்றுள்ளது. இதனால் அந்த அணி டி.என்.பி.எல். கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

ஒரே ஆட்டத்தில்...

திண்டுக்கல் அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஜெகதீசன் (345 ரன்), விவேக் (249 ரன்), ஹரி நிஷாந்த் (249) ஆகியோரும் பந்துவீச்சில் அபினவ், முகமது (தலா 8 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். திண்டுக்கல் அணி இந்தப் போட்டித் தொடரில் ஒரு ஒரே ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

முதல் இடத்தில்...

மதுரை பாந்தர்ஸ் அணி ஏற்கனவே இரண்டு முறை தோற்றதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. அந்த அணியின் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அருண் கார்த்திக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 397 ரன் குவித்து இந்தப் போட்டித் தொடரில் முதல் இடத்தில் உள்ளார். 5 அரை சதம் அடித்துள்ளார். தலைவன் சற்குணம் (191 ரன்), சுஜித் சந்திரன் (175 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர்.

பந்து வீச்சில் அபிஷேக் தன்வர் (11 விக்கெட்), கவுசிக் (9 விக்கெட்) ஆகியோர் முத்திரை பதித்து உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து