ரோஜர்ஸ் கோப்பை தொடர்: நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
nadal 2017 9 5

மாண்ட்ரியல் : ரோஜர்ஸ் கோப்பை மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

நடாலுக்கு நெருக்கடி

கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடைபெறும் இத்தொடரில், உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் காலிறுதியில் ஸ்பெயின் வீரர் நடால், குரோஷியாவின் மரின் சிலிச்-ஐ எதிர்கொண்டார். தொடக்கத்தில் வேகம் காட்டிய சிலிச், முதல் செட்டை வசப்படுத்தி நடாலுக்கு நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட நடால், நம்பர் ஒன் வீரர் என்பதை நிரூபிக்கும் வகையில் பதிலடி கொடுத்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவில், 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றிபெற்றார்.

அரையிறுதிக்கு...

முன்னதாக, நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், பிரான்சின் காரோலின் கார்சியா-வுடன் மோதினார். ஆரம்பத்தில், இருவரும் சமபலத்துடன் மோதியதால் முதல் செட் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருந்த போதும், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாலெப், அந்த செட்டை போராடி வசப்படுத்தினார். ஆட்டத்தின் முடிவில், 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று, சிமோனா ஹாலெப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து