நிலநடுக்கம்: இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 387-ஆக உயர்வு

ஜகார்தா : இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட பின்னதிர்வுகளுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 387-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:-
சுற்றுலா தளமான லோம்போக் தீவை மையமாகக் கொண்டு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9-ஆக பதிவாகியிருந்தது. அந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சில நாள்களுக்குப் பிறகு தீவை சுற்றிலும் பல முறை பின்னதிர்வுகள் உணரப்பட்டன.
இந்த சம்பவங்களில் ஏராளமான கட்டிடங்கள், மசூதிகள், வர்த்தக கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. சுமார் 3,87,000 பேர் தங்களது வீடுகளை இழந்து உள்ளனர். 13,000 பேர் காயமடைந்தனர்.
தற்போதைய நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387-ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஏராளமான இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன. அதனை செய்து முடிக்கும் பணிகளில் மீட்பு குழு வீரர்கள் பலர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இடிபாடுகள் அகற்றப்படும்போது மேலும் பலர் அதில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.