2-வது டெஸ்ட்: 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
england declared 2018 8 12

லண்டன் : லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகே சென்ற நிலையில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியது. இந்நிலையில் இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

2-ம் நாள் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் முன்னணி வீரர்கள் சொதப்பினர். கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் குறைந்த ரன்களே எடுத்த நிலையில், பேர்ட்ஸ்டோ- வோக்ஸ் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. பேர்ஸ்டோ 93 ரன்களில் ஆட்டமிழக்க, வோக்ஸ் நிலைத்து நின்று சதம் அடித்தார்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் கரன் 22 ரன்களுடனும் ஆட்மிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. வோக்ஸ், சாம் கரன் இருவரும் அதிரடியாக ஆடினர். சாம் குரன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. இத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து