ராமநாதபுரத்தில் தென்னை வளர்ப்போருக்கான ஒருநாள் கருத்தரங்கு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rmd news

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் தென்னை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் ஒருநாள் கருத்தரங்கு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறை மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக தென்னை சாகுபடியில் தொழில்நுட்பம், தென்னையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு என்ற தலைப்பில், தென்னை மரம் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் ஒருநாள் கருத்தரங்கு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது இந்த கருத்தரங்கினை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-  தென்னை பயிரானது எண்ணெய் வித்து பயிர்களில் முக்கியத்துவம் வாய்ந்த பயிராகும். இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்னை அதிகளவில் வளர்க்கப்படுகிறது.  இந்திய அளவில் தேங்காய் உற்பத்தி ஆண்டொன்றிற்கு 61 மில்லியன் டன் ஆகும்.  இந்திய தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு 33.84சதவீதம் பங்கு வகிக்கின்றது.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 9,500 ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.  குறிப்பாக ராமநாதபுரம், திருப்புல்லாணி, உச்சிப்புளி மற்றும் கடலாடி ஆகிய வட்டாரங்களில் அதிகளவில் தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.  மேலும் மாவட்டத்தில் தேவிப்பட்டிணம், உச்சிப்புளி ஆகிய இடங்களில் தென்னை நாற்றுப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நெட்டை மற்றும் குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இக்கருத்தரங்கில் தென்னை ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள், உயிர் உரங்கள் பயன்பாடு, தென்னை மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி, நீரா பானம் தயாரிப்பு, தென்னை தோட்ட பராமரிப்பு உட்பட பல்வேறு தலைப்புகளில் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மூலம் விளக்கப்படுகிறது.  எனவே விவசாயிகள் இக்கருத்தரங்கினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
 முன்னதாக இரட்டையூரணி கிராமத்தில் தென்னை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு பதிவு செய்து சிறப்பாக செயல்பட்ட விவசாயி அபுதாகீர் என்பவருக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.  அதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கான தென்னை சாகுபடியில் தொழில்நுட்பம் குறித்த விளக்க கையேட்டினை வெளியிட்டார்.  இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எல்.சொர்ணமாணிக்கம், தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் ராஜிவ் பூசன் பிரசாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பொ.ராஜா, வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் காதர்சுல்தான், வேளாண்மை துணை இயக்குநர் எஸ்.எஸ்.சேக்அப்துல்லா, கடலோர உவர் ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர்.நா.சாத்தையா, பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர்.சி.கார்த்திகேயன்;, திட்ட ஒருங்கிணைப்பாளர்  எஸ்.கவிதா உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து